கோவை சரகம் டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் இன்று (ஜூலை 7) காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டிஐஜி விஜயகுமார் சொந்த ஊர் தேனி மாவட்டம் அனைக்கரைப்பட்டி கிராமம். தந்தை செல்லையா வருவாய் கிராம அதிகாரி (விஏஒ). தாய் ராஜாத்தி அரசு பள்ளி ஆசிரியர். உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா ஒரு தங்கை.
1976 செப்டம்பர் 21 ஆம் தேதி பிறந்தவர். தற்போது 47 வயது. பனிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ் கல்வி பயின்றவர்.
பிஇ மெக்கானிக் முடித்துவிட்டு சென்னைக்கு சென்றார். படித்த படிப்புக்கு வேறு வேலை கிடைக்காததால் ஒரு ஜெராக்ஸ் கடையில் மாதம் ஆயிரம் ரூபாய் வேலைக்கு சேர்ந்தார். வேலை செய்து கொண்டே குரூப் 4 தேர்வுக்கு கஷ்டப்பட்டு படித்தார்.
படிப்பதற்கு வேலை தடையாக இருக்கிறது என்று வேலையை விட்டு தீவிரமாக படிக்க ஆரம்பித்தார். இருந்தபோதும் அந்த தேர்வில் பெயிலாகி விட்டார். இருந்தபோதும் படிப்பு ஆர்வம் அவருக்கு குறையவில்லை.
1999-இல் குரூப் 2 தேர்வு எழுதினார். தேர்வில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலைய துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். அரசு வேலை கிடைத்தும் படிப்பை அவர் விடவில்லை. அதே வருடத்தில் குரூப் 1 தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்றார். இப்படி போராடி போராடி காவல் துறையில் டிஎஸ்பி யாக பணியில் சேர்ந்தார்.
ஈரோடு, திருவள்ளூர், சென்னை போன்ற இடங்களில் பணியாற்றியவர் விடாமுயற்சியுடன் ஐபிஎஸ் ஆகவேண்டும் என்ற லட்சிய வெறியுடன் தொடர்ந்து படித்தார். 2009-இல் தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரியாக ஆனார்.
காஞ்சிபுரம், கடலூர், சென்னை சிபிசிஐடி வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் பகுதியில் விஜயகுமார் ஐபிஎஸ் ஆக மிகத்தீவிரமாக பணியாற்றினார்.
சாத்தான்குளம், டிஎன்பிஎஸ்சி வழக்குகளை புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து உயரதிகாரிகள் மக்கள் பாராட்டுகளையும் பெற்றார்.
இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகள் கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரே மகள். இவர் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டார். மகளை டாக்டராக ஆக்க வேண்டும் என்பது கணவன் மனைவி இருவருக்கும் விருப்பம்.
”எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார் ஆனால் நான் ஐபிஎஸ்ஸாக வந்துவிட்டேன். நீ எப்படியாவது டாக்டராக வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று அடிக்கடி மகளிடம் சொல்லி வந்திருக்கிறார் விஜயகுமார்.
நீட் தேர்வில் மகள் வெற்றி பெற வேண்டும் என்று அவரை தீவிரமாக படிக்க வைத்தார். ஆனால் நீட் தேர்வில் மகள் மிக குறைவான மார்க் எடுத்ததிலிருந்து மனக்குழப்பத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் மகளிடம் நான் தமிழ் வழி கல்வியில் படித்து குரூப் 4, குரூப் 2,குரூப் 1, யுபிஎஸ்சி என படித்து ஐபிஎஸ் ஆனேன். ஆனால் உன்னால் நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டருக்கு படிக்க முடியவில்லையே என அடிக்கடி சொல்லி வந்துள்ளார்.
நீட்டில் குறைவான மார்க் வாங்கிய மகளை எப்படி மெடிக்கல் காலேஜில் சேர்ப்பது என்ற கவலையை தனது சக நண்பர்களிடம் தெரிவித்து வந்துள்ளார்.
நேற்று இரவு முழுவதும் தீவிர மன உளைச்சலில் உறக்கம் இல்லாமல் புரண்டு புரண்டே இருந்திருக்கிறார். பொழுது விடிந்தது. கன்மேன் (துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போலீஸ்) ரவியை தொடர்புகொண்டு, வெப்பன்சை எடுத்துவாப்பா என்றுள்ளார்.
காலை 6 மணியளவில் ரவியும் பிஸ்டலை எடுத்துபோய் கொடுத்துள்ளார். சுமார் 6.15 மணிக்கு பிஸ்டல் மூலம் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து அனைத்து அதிகாரிகளும் குவிந்தனர். செல்போன் கால்டீய்ட்டல்ஸ் ஆராய்ந்து வருகின்றனர். கன்மேனையும் விசாரித்து வருகின்றனர்.
விஜயகுமார் ஒரு தீவிர சிவன் பக்தர். வாரத்தில் இரண்டு நாட்கள் பழமையான சிவன் கோயிலுக்கு சென்று வருபவர்.
மின்னம்பலத்தின் முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் தான் இவை. மேற்கொண்டு கிடைக்கும் தகவல்களை தொடர்ந்து பதிவு செய்கிறோம்.
வணங்காமுடி
”மஞ்சள் ஜெர்சியில் விரைவில் சந்திப்போம்”- ஜடேஜா வாழ்த்து!
டிஐஜி விஜயகுமார் தற்கொலை: முதல்வர் இரங்கல்!