கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. காவல்துறையினர் மத்தியில் அவரது இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 7-ஆம் தேதி விஜயகுமார் தனது பாதுகாவலர் ரவிச்சந்திரனிடமிருந்து துப்பாக்கியை பெற்று தற்கொலை செய்துகொண்டார். டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தூக்கத்திற்காக தினமும் தூக்க மாத்திரை எடுத்துக்கொள்வார் என்று பாதுகாவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விஜயகுமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கொடுத்துள்ள வாக்குமூலம், “கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கோவை சரக டிஐஜிக்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன். பாதுகாப்பு பணியில் உள்ள எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையிலிருந்து 183 என்ற 9 எம்எம் ரக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது. டிஐஜி முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் தங்கியுள்ளேன். கோவை டிஐஜியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக விஜயகுமார் பொறுப்பேற்றார். அவர் வந்த நாள் முதலே தனக்கு தூக்கம் வருவதில்லை என்று கூறுவார். மேலும் தூக்கத்திற்காக தினமும் மாத்திரை எடுத்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஜூலை 6-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியே போய்விட்டு வந்தார்.
கடந்த ஜூலை 7-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு வழக்கு விவரங்கள் பதியப்படும் டிஎஸ்ஆர் புத்தகத்தை கேட்டு எனது அறைக்கு வந்தார். காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டார். அவர் உடனே பால் காய்ச்சி கொடுத்தார். பாலை குடித்துவிட்டு நான் பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்த இடத்திற்கு சென்ற அவர், துப்பாக்கியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு சிறிது நேரம் அதனை பார்த்தார். பின்னர் இதை எப்படி கையாள வேண்டும் என என்னிடம் கேட்டார். நான் சொல்லிக்கொண்டு இருந்தபோதே துப்பாக்கியுடன் அவர் வெளியே சென்று விட்டார்.
உடனே நான் டி சர்ட் மாற்றிக்கொண்டு வெளியே வர முயன்றேன். அதற்குள் வெளியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நானும் என்னுடன் இருந்த ஓட்டுநர் அன்பழகனும் ஓடிச்சென்று பார்த்தோம். அப்போது டிஐஜி தலையில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார். என்னிடமிருந்து எடுத்து சென்ற துப்பாக்கி அருகில் கிடந்தது.
அதிர்ச்சியான நாங்கள் இதை அவரது மனைவியிடம் தெரிவிக்க சப்தம் போட்டுக்கொண்டே ஓடினோம். நாங்கள் அவரிடம் நடந்தவற்றை கூறினோம். பிறகு டிஐஜியை தூக்கிக்கொண்டு காரில் காலை 7 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அரசு மருத்துவமனையில் டிஐஜி உடலை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் சுட்டுக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்