dig vijayakumar call me as dear

’டியர் அம்பேத்கர்னு தான் கூப்பிடுவார்’: டிஐஜி மறைவால் உருகிய இன்ஸ்பெக்டர்

தமிழகம்

மறைந்த டிஐஜி விஜயகுமார் அன்பானவர் என்றும் அவர் எப்போதும் தன்னை டியர் என்றுதான் அழைப்பார் என்றும் அவருடன் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணிபுரிந்து வந்த விஜயகுமார் இன்று (ஜூலை 7) காலை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மறைவிற்கு உடன் பணிபுரிந்தவர்கள், காவல்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டிஐஜி விஜயகுமாருடன் பணிபுரிந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் காவல் ஆய்வாளர் அம்பேத்கர்.

டிஐஜி விஜயகுமார் குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டிஐஜி விஜயகுமார் மறைவால் இன்று காலை அதிர்ச்சியுடன் விடிந்தது. சிறந்த ஆன்மீகவாதி அன்பானவர், இரக்க குணம் கொண்டவர். சில நேர்வுகளில் தன் கீழ் பணிபுரிபவர்களை திட்டிவிட்டாலும் அடுத்த நொடியே மறந்து பாசத்தை காண்பிப்பார்.

கடலூர் எஸ்.பியாக 2015ல் இருந்த போது பணிபுரிந்தேன். அதன்பிறகு 2017ல் க்யூ பிரிவில் மாறுதலாகி இருந்தேன். எனது உறவினருக்கு உடல் நிலை சரியில்லாத போது என்னை அழைத்துப் பேசினார். அதே மாதிரியான உடல் நிலை சரியில்லாமல் அவரது நெருங்கிய உறவினர் இருப்பதாக கூறினார்.

2016-17 ல் மனதளவில் தளர்வாகவே இருந்தார். க்யூபிரிவில் இருந்த என்னை மாறுதல் பெற்று வரும்படி கூறினார். அவரது உதவியால் சிதம்பரம் காவல் நிலையத்தில் சேர்ந்தேன். சில பல காரணங்களால் ஒரு சில மாதங்களில் அங்கிருந்தும் மாற்றப்பட்ட போதும் அழைத்து அன்புடன் பேசினார். முன்பை காட்டிலும் என்னிடம் ஒரு சகோதரரைப்போல் பாவித்து பேச ஆரம்பித்தார்.

இறுதியாக திருவாரூரில் சந்தித்தேன். மதிய உணவு வேளையின் போது சென்று சேர தாமதமாகியும் காத்திருந்து பார்த்தார்கள். அன்பில் ஆனவர்.

டியர் என்கின்ற வார்த்தையையே என்னிடம் பேசும் போதும் சாட் பண்ணும் போதும் பயன்படுத்தினார். இளகிய மனம் படைத்தவர். காக்கி சீருடையை மிகவும் நேசித்தவர். இவ்வளவு விரைவாக இயற்கையில் கரைவார் என எதிர்பார்க்கவில்லை. மிஸ் யூ சார்.
கம்பீரமாக இருப்பவர்கள் எல்லாம் எதையும் தாங்குபவர்கள் அல்ல. அவர்களுக்கும் மன நிம்மதி கெடும்.

அந்த நிம்மதியைக் கெடுப்பது….. மீடியாக்களின் அளவுக்கு மீறிய தாக்குதல், அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் அதிகார அணுகுமுறைகள், நீதிமன்ற வழக்குகள், குடும்பத்தில் பிரச்சனைகள், மருத்துவ பிரச்சனைகள் ஆகும்.

இதனை ஒவ்வொரு அதிகாரிகளும் காவல்துறையில் பல காலகட்டத்தில் கடந்துவந்துள்ளார்கள்.

இனியும் வருவார்கள். இந்த மரணத்தை முன்னுதாரணமாக எவரும் எடுத்துக்கொள்ளவேண்டாம்” என்று மனமுருகி பதிவிட்டுள்ளார் காவல் ஆய்வாளர் அம்பேத்கர்.

மோனிஷா

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

ஆளுநருக்கு கடிதம்: ஆதாரத்தை வெளியிட்ட தமிழக அரசு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *