திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.DIG Vandita Pandey transferred
மத்திய அரசின் இளைஞர் விவகாரத் துறை இயக்குநராக திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும்வரை வந்திதா பாண்டே மத்திய அரசு பணியில் நீடிப்பார் என்று மத்திய அரசின் துணை செயலாளர் அனிஸ் கண்மணி ஜாய் இன்று (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மாநில பதவியில் இருந்து விடுவிக்குமாறும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் இவர் புதுக்கோட்டை எஸ்.பி. பதவியில் இருந்து திண்டுக்கல் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து அவர் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்திருந்ததாக தகவல்கள் வரும் நிலையில், தற்போது அழைப்பு வந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் வந்திதா பாண்டே. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. இவரும் தற்போது டிஐஜியாக இருக்கு வருண் குமார் ஐபிஎஸும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
2014ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக இருந்த வந்திதா பாண்டே, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மையை வெளிகொண்டுவந்தவர். இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் சிக்கினர்.
இதையடுத்து கரூரூக்கு மாற்றப்பட்டார். 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது, கரூர், அரவக்குறிச்சி அருகே கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டது. அந்த போலீஸ் அதிகாரிகளில் முக்கியமானவர் வந்திதா பாண்டே.
அண்மையில் இவர் மீதும், இவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினர். அதை எதிர்த்து வருண்குமார் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. DIG Vandita Pandey transferred