சென்னை மேற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ( சட்டம் ஒழுங்கு) விஜயகுமார், தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புதுமனை புகுவிழா அழைப்பிதழை பதிவிட்டிருந்தார். இந்த அழைப்பிதழ் பலரையும் கவர்ந்தது. அப்படி அந்த அழைப்பிதழில் என்ன ஸ்பெஷல்?
தமிழக சிறைத்துறையில் அரக்கோணத்தை சேர்ந்த காமராஜன் என்பவர் பணிபுரிகிறார். இவர் கஷ்டப்பட்டு அங்குமிங்கும் கடன் வாங்கி அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். வீடு கட்டுவது கடினமான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். பல்வேறு கஷ்ட நஷ்டங்களுக்கிடையே, காமராஜனும் தனது வீட்டை கட்டி முடித்துள்ளார்.
பின்னர்,புது வீட்டுக்கு புதுமனை புகு விழா நடத்த வேண்டுமே. இதுவும் முக்கியமானது அல்லவா? இதையடுத்து, காமராஜனும் தன் புது வீட்டுக்கு புதுமனை விழாவுக்கு அழைப்பிதழ் அச்சடித்தார். அதில், அவர் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
So refreshing ???????? and profound! pic.twitter.com/37C986fec9
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) November 22, 2024
அந்த பத்திரிகையில் காமராஜன் தனது வீட்டை கட்ட உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதன்படி, வீட்டை கட்ட உதவிய மேஸ்திரிகள், கொத்தனார்கள், கட்டுமான பொருட்கள் தந்தவர்கள், மணல், கம்பி, சிமெண்ட் சப்ளை செய்தவர்கள், கம்பி கட்டியவர், தச்சர், மின்சார இணைப்பு கொடுத்தவர், பெயிண்ட் அடித்தவர், தரைதளம் அமைத்தவர், வெல்டிங் செய்தவர் என அனைவரின் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நன்றி கூறியுள்ளார்.
இந்த அழைப்பிதழில் மற்றொரு ஹைலைட்டும் உள்ளது. அதாவது, வீடு கட்ட கடன் கொடுத்து உதவிய அரக்கோணம் கிளை எஸ்.பி.ஐ வங்கிக்கு நன்றி என்றும் மற்றும் பலதரப்பட்ட நகைகள் என்றும் காமராஜன் குறிப்பிட்டது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த அழைப்பிதழ் இணையத்தில் பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அதானியுடன் ஜெகன் மோகன் ஒப்பந்தமா? – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விளக்கம்!