அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, முதலில் POSH குழுவில் புகார் அளித்தாரா? இல்லையா என்பது குறித்து உயர்க் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதலில் காவல்துறையிடம் புகார் அளித்தார். POSH (பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க அமைக்கப்படும் குழு) குழுவிடம் சொல்லவில்லை ” என்று கூறியிருந்தார்.
ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் அருண், பல்கலைக்கழகத்தின் POSH குழுவும், அந்த மாணவியும் சேர்ந்து காவல்துறையில் புகார் அளித்தனர் என்று கூறியிருந்தார்.
எனவே, ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக கோவி.செழியன் தனது எக்ஸ் பக்கம் மூலம் இன்று (டிசம்பர் 27) விளக்கமளித்துள்ளார்.
அதில், “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100-க்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தின் (POSH – Prevention of Sexual Harassment Committee) உள்விசாரணைக் குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களைச் சொல்லி புகார் அளித்திருந்தார்.
காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும்போதுதான், இந்தச் சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்தப் பிரச்சினைத் தெரியவந்துள்ளது.
அதை வைத்துதான் POSH குழு நேரடியாகப் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி எடுத்துக்கொள்ளப்பட்டது” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
‘ஒரு சிறந்த மனிதர், உண்மையான நண்பர்’ : மன்மோகன் சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!