வரையாடு சினையாக இருந்தது தெரியாமல், மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் இறந்ததா என வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ.25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதன்படி ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 7-ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரையாடுகளுக்கு புதிதாக ரேடியோ காலர் கருவி பொருத்தி, அவற்றின் வாழ்வியல் சூழல்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசியப் பூங்கா வனப்பகுதிகளில் 12 வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டது.
நீலகிரியில் இதுவரை மூன்று வரையாடுகளுக்கு, ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. முக்கூர்த்தி தேசியப் பூங்கா வனப்பகுதியில் நான்காவது வரையாடுக்கு ரேடியோ காலர் பொருத்த மயக்க ஊசி செலுத்தியபோது உயிரிழந்தது.
இதனால் வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்த வரையாடு வயிற்றில் குட்டி இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இதுகுறித்து பேசியுள்ள ஓசை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி காளிதாஸ், “மான், வரையாடு போன்ற சிறிய வகை விலங்குகளுக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தாமல், குழாய் மூலம் செலுத்தலாம். இந்த வரையாடுக்கு எவ்வாறு மயக்க மருந்து செலுத்தப்பட்டது என்று தெரியவில்லை.
வழக்கமாக இருப்பதைவிட சினை காலத்தில் எல்லா விலங்குகளும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும். இதனால் வயிற்றில் குட்டியுடன் இருந்ததால், மயக்க மருந்து செலுத்தப்பட்டதுகூட வரையாடு இறந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள நீலகிரி வரையாடு திட்ட இயக்குநர் கணேசன், ‘‘முக்கூர்த்தியில் மூன்று வரையாடுகளுக்கு வெற்றிகரமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு, ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரு வரையாடுக்கு மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டது.
நான்காவது வரையாடுக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தி, ரேடியோ காலர் கருவி பொருத்தும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து விட்டது.
வரையாடுகளை பிடிக்க மாற்று வழிமுறைகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொடூரமானது : ஸ்டாலின்
கீர்த்தி சுரேஷ் திருமணம்: நேரில் வாழ்த்திய விஜய்
72 ஆண்டுகளில் குறைவான நாட்கள் கூடிய பேரவை : பட்டியலிட்டு ராமதாஸ் காட்டம்!
கம்பீரமான அழகியல்… வைக்கத்தில் அமைச்சர் வேலுவை பாராட்டிய ஸ்டாலின்
1.60 லட்சம் கோடியுடன் ரஷ்யாவுக்கு தப்பிய சிரிய அதிபர்… மாஸ்கோவில் உல்லாச வாழ்க்கை!