சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆளுநர் ரவி பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் ஓடாநிலை என்ற இடத்தில், தீரன் சின்னமலை நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்,
முதல்வர் ஸ்டாலின் மரியாதை
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தீரன் சின்னமலை. அவரது வீர தீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலை மற்றும் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதன்படி சென்னை கிண்டியில் உள்ள சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ஈபிஎஸ் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஓபிஎஸ் புகழாரம்
தீரன் சின்னமலை நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தம் வாழ்வைத் துச்சமென மதித்து அன்னை பாரதத்தின் அடிமைத்தளையைத் தகர்த்தெறிந்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை என்று கூறியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போர்களில் வெற்றி பெற்ற தீரன் சின்னமலை அவர்களை எளிதில் வெல்ல முடியாது என முடிவு செய்த ஆங்கிலேயப் படையினர் சூழ்ச்சியால் அவரை கைது செய்து, சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று அவரை தூக்கிலிட்டனர்.

தீரன் சின்னமலை வழிநடப்போம்
மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக செலவிட்டு இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன் உயிரை அர்ப்பணித்தாலும், அவர் திருக்கோயில்களுக்கு செய்த திருப்பணிகளும், அவர் அளித்த கொடைகளும், தர்மங்களும் ஏராளம். மாவீரர் தீரன் சின்னமலையின் பெருமைமிக்க அடிச்சுவட்டில் நாமும் பயணித்து நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என அவரது நினைவு நாளில் நாம் உறுதி ஏற்போம். மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றுவோம்! அவர் வழி நடப்போம்! என்று கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் மரியாதை
கரூரில் தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பல்வேறு இடங்களில் அனுசரிப்பு
இதேபோன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் தீரன் சின்னமலையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஏராளமான அரசியல் கட்சியினரும், கொங்கு அமைப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
கலை.ரா