மானிய விலையில் டிராக்டர் வாங்க லஞ்சம்? – அம்பலப்படுத்திய ஆடியோ!

Published On:

| By Selvam

மத்திய அரசு வேளாண்மை இயந்திரமயமாக்குதல் துணை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர் மற்றும் கருவிகளை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு 50 சதவிகிதம் மானியம், மற்ற பிரிவினருக்கு 40 சதவிகிதம் மானியத்தில் டிராக்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 385 ஒன்றிங்களில் (Blocks) ஒரு ஒன்றியத்திற்கு 10 பேர் என்ற முறையில் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் 3,850 டிராக்டர்களை வழங்கப்பட்டு வருகிறது.

திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு

டிராக்டர்கள் வழங்குவதில் அதிகாரிகள் அலைக்கழிப்பு, உள்ளூர் அரசியல் புள்ளிகள் தலையீடு என பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாமக பிரமுகர் ஒருவர் திமுக ஒன்றிய செயலாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து டிராக்டர் வாங்கியது தொடர்பான ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/Minnambalamnews/status/1880209786115113351

அந்த ஆடியோவில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபுவிடம் பாமவைச் சேர்ந்த பார்த்திபன் மானிய விலையில் டிராக்டர் வாங்க திமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரபுவை தொடர்புகொண்டு நீங்கள் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறதே… என்ன பிரச்சனை என்று கேட்டோம்…

“காரியமங்கலம் மத்திய ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் இல.கிருஷ்ணன். இவர் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து திமுகவுக்கு வந்தவர்.

திமுக ஒன்றிய செயலாளர் இல.கிருஷ்ணன்

நான் (பிரபு) தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு வந்தவன். நாங்கள் இருவரும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் தான்.

இருந்தாலும் நான் திமுகவுக்கு விசுவாசமாக இருப்பவன். ஆனால், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், சாதி ரீதியாக மாற்றுக் கட்சியினருக்கு பணம் பெற்றுக்கொண்டு அரசு சலுகைகளை வழங்கி வருகின்றார்.

அப்படித்தான் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பாமகவுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்த காரியமங்களம் மத்திய ஒன்றியத்தில் உள்ள மாரியம்மன் கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது தந்தை பழனி ஆகியோருக்கு மானிய விலையில் டிராக்டர் வாங்க பரிந்துரை செய்துள்ளார். திமுகவில் பல விவசாயிகள் நிலம் வைத்துக்கொண்டு மானிய விலை டிராக்டர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.

இதைப்பற்றி திமுக ஒன்றிய செயலாளர் திமுகவுக்கு உதவி செய்யாமல் மாற்று கட்சியினருக்கு பணம் வாங்கிக்கொண்டு உதவி செய்கிறார் என்று தருமபுரி எம்.பி மணியின் பி.ஏ மாதப்பனிடம் புகாராக தெரிவித்தேன்.

உடனடியாக பாமவைச் சேர்ந்த பார்த்திபன் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘ஒன்னும் பிரச்சனை வேண்டாம். நான் இவ்வளவு நாள் பாமகவுக்கு வேலை செஞ்சது தவறு தான். இனி அப்படி செய்ய மாட்டேன்’ என்று என்னிடம் பேசினார்.

பார்த்திபன்

நான் அவரிடம் ‘சரி… மானிய விலையில் டிராக்டர் வாங்க ஒன்றிய செயலாளருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீங்க’ என்று கேட்டேன்.

அதற்கு ‘எனது அப்பா பழனி பெயரில் தான் வாங்கியிருக்கிறோம். 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம்’ என்று கூறினார். இதுதான் இன்றைக்கு திமுகவின் நிலையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை ஆட்சியாளர்களின் தலையீட்டால் உரியவர்களுக்கு கிடைக்காமல் போகிறது என்று வேதனை தெரிவிக்கிறார்கள் வேளாண் அதிகாரிகள்.

வணங்காமுடி    

தி கிரேட் எம்ஜிஆர்… மோடி வெளியிட்ட வீடியோ… தலைவர்கள் புகழாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel