கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக யாரோ சொல்லிக் கொடுத்து தனபால் பேசுவதாக அவரது மனைவி செந்தாமரைச்செல்வி தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டியளித்திருந்தார்.
இதையடுத்து அவரது மனைவி தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 7) புகார் அளிக்க வந்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவருடைய மனைவி செந்தாமரைச்செல்வி, “என் கணவர் தனபால் பேட்டி கொடுப்பதெல்லாம் எனக்கு பயமாக இருக்கிறது. ஏற்கனவே அவங்க தம்பி செய்த பாவத்திற்கு நானும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது என்றாலும் இன்னமும் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
இப்போது அவர் பேட்டி கொடுப்பதால் மீண்டும் என்னிடம் விசாரிப்பார்கள். உன் கணவன் சொல்வது குறித்து உனக்கு தெரியாதா என்று கேட்பார்கள். இவர் என்னை கேட்டு பேட்டி கொடுப்பதில்லை.
விசாரணையோ, பேட்டி கொடுப்பது பற்றியோ அல்லது அவரை பற்றியோ என்னிடம் வந்து எதுவும் கேட்கக்கூடாது. போலீசை பார்த்தாலே பயம் என்ற நிலைமையில் இப்போது நான் இருக்கிறேன். பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அப்படி கேட்டால் பிடித்து அடிக்கிறார்.
அங்கு வீட்டில் இருக்கும் போது தான் அடிக்கிறார் என்று அம்மா வீட்டிற்கு வந்தேன். இங்கு வந்தும் என்னை அடிக்கிறார். அதனால்தான் புகார் அளிக்க வந்தேன். ஆனால் புகாரை ஏற்றுக் கொள்ளாததால் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளேன்.
அவர் பேசுவது எதுவும் உண்மையில்லை. யாரோ சொல்லிக் கொடுத்து பேசுகிறார். இதுவரைக்கும் இது எதையுமே வீட்டில் பேசினதே கிடையாது. ஆனால் இப்போது புதிதாக சொல்கிறார்.
கனகராஜ் இறப்பதற்கு முன்பு 6 மாதங்கள் என் கணவருடன் பேசாமல் இருந்தது மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் பேசிக் கொண்டார்களா? இல்லையா என்பது எனக்கு தெரியாது. என்னை கொலை செய்துவிடுவாரோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தனபால், “எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 5 மணிக்கு கொங்கணாபுரத்தில் ஒரு முக்கியமான புள்ளியை வைத்து என்னிடம் பேரம் பேச வந்தார். காட்டிக் கொடுக்க வேண்டாம். உன்னால் எவ்வளவு சமாளிக்க முடியும் என்று பேரம் பேசினார்கள். அவரிடம், என்னிடம் பேரம் பேச வராதீர்கள் என்று சொல்லி துரத்திவிட்டேன்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளது. நான் ஆஜராவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று பழனிசாமி என்னுடைய மனைவியை தூண்டி விட்டு, யாரோ சொல்லிக் கொடுத்து நான் பேட்டி கொடுப்பதாக சொல்லியுள்ளார். பழனிசாமி என் வீட்டிற்கு வந்ததற்கு ஆதாரம் கிடையாது. ஏனென்றால் என் வீட்டில் கேமரா இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்!
டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்… எப்படி?