ஆன்லைன் கடன் செயலி: சைலேந்திர பாபு எச்சரிக்கை!

Published On:

| By Selvam

மொபைல் போனில் கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக தமிழகத்தில் கடன் செயலிகள் மூலம் பலரும் ஏமாற்றப்படும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தாங்கள் வாங்கிய பணத்திற்கு அதிகமான தொகை செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் பணத்தை செலுத்தாததால் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்கியது குறித்து தெரிவிப்பதாலும் சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

இந்தநிலையில் கடன் செயலி மோசடிகளை தடுப்பது குறித்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில், “கடன் செயலி மோசடி என்பது பிரபலமானது. இளைஞர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கலாம் என கடன் செயலியை பதிவிறக்கம் செய்கிறார்கள். இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் போது குடும்ப தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் புகைப்பட கேலரியை பயன்படுத்த அனுமதி கேட்கிறார்கள். வாங்கும் கடனுக்கு மாதம் ரூ.1000 வசூலிக்கிறார்கள்.

இந்த பணம் முழுவதையும் கட்டி முடித்த பிறகு கூடுதலாக ரூ.20 ஆயிரம் பணம் கட்ட சொல்வார்கள். நீங்கள் அந்த பணத்தை கட்ட மறுத்தால் உங்கள் நண்பர்களை தொடர்புகொண்டு கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறுவார்கள். உங்கள் கேலரியில் உள்ள புகைப்படங்களை மார்ஃபிங் செய்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்புவார்கள்.

உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துவார்கள். உங்களை பிளாக் மெயில் செய்து பணத்தை பெற்று விடுவார்கள். இந்த கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

எனவே கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள். கந்து வட்டி, மீட்டர் வட்டி போல கடன் செயலி மூலம் உங்கள் பணத்தை ஏமாற்றி விடுவார்கள். சைபர் குற்றங்கள் குறித்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

வளர்ப்பு நாய்களுடன் விளையாடிய தோனி

ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் லஞ்சம்: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ மீது வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share