மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்ற குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி, வங்கி கணக்கிலிருந்து பணத்திருட்டு மோசடி நடைபெறுகிறது. மோசடியில் சிக்காமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சைலேந்திர பாபு பேசும்போது,
“மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்று உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். இன்று இரவு 10.30 மணிக்கு உங்கள் வீட்டின் மின்சாரத்தை தடை செய்து விடுவோம்.
நீங்கள் ஏற்கனவே மின்சார கட்டணம் செலுத்தினால் அந்த புகைப்படத்தை அனுப்புங்கள். பின்னர் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள சொல்வார்கள்.
நீங்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டால், மின்சார கட்டணம் செலுத்த நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று தொடர்பை துண்டித்து விடுவார்கள்.
பின்னர் மின்சார வாரியத்திலிருந்து பேசுகிறோம் என்று ஒருவர் உங்களை தொடர்புகொண்டு, உங்களுடைய வங்கி கணக்கு விவரங்கள், மின்சார கட்டணம் செலுத்தியது தொடர்பான விஷயங்களை கூறுவார்கள்.
சென்ற வாரம் மின்சார கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அப்டேட் ஆகவில்லை. அதனால் நீங்கள் ஒரு புதிய செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
அதன்மூலமாக நீங்கள் ரூ.10 மட்டும் செலுத்த வேண்டும். பின்னர் நாங்கள் மின்சார கட்டணம் செலுத்தியதை அப்டேட் செய்து விடுகிறோம். இனி இந்த பிரச்சனை வராது என்று கூறுவார்கள்.
அந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து ரூ.10 செலுத்தினால் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கு சென்று விடும். உங்கள் தொலைபேசியில் வரக்கூடிய அனைத்து குறுஞ்செய்திகளையும் அவர்களால் பார்க்க முடியும்.
இதனைக் கொண்டு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் திருடிச்சென்று விடுவார்கள். எனவே, இது மிகப்பெரிய ஒரு மோசடி. இந்த மாதிரி குறுஞ்செய்தி வந்தால் அதனை நீங்கள் தவிருங்கள்.
அவர்கள் மீது புகாரளிக்க 100,112 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். இல்லையென்றால் காவல் உதவி செயலியில் தகவல் மட்டும் கொடுங்கள். நாங்கள் குற்றவாளியை கண்டுபிடித்துவிடுகிறோம்.
இவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்ட பணம் இந்திய நாட்டில் இருந்தால் நாங்கள் உடனடியாக கண்டுபிடித்து விடுவோம்.
வெளிநாடுகளுக்கு சென்றால் மீண்டும் பணம் உங்கள் கைகளுக்கு வரும் என்பதில் எந்த நிச்சயமும் கிடையாது. மின் கட்டண மோசடியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்