காவல்துறையில் வரப்போகும் மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு பயிற்சி!

Published On:

| By Kavi

காவல்துறையினரையும், பொதுமக்களையும் இணக்கமாக கொண்டு வரும் முயற்சியில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஈடுபட்டுள்ளார்.

தமிழக காவல்துறை சமீப நாட்களாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கஸ்டடி டெத், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வது என பல்வேறு புகார்களைச் சந்தித்து வருகிறது.

இந்தசூழலில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஒரு முக்கிய முயற்சியை எடுத்துள்ளார்.

அதாவது தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், டிஎஸ்பிகளை சென்னை அழைத்து பயிற்சி கொடுத்து வருகிறார். பேட்ஜ் பேட்ஜாக பிற மாவட்டங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகளை அழைக்கும் டிஜிபி, சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் இருக்கும் மீட்டிங் ஹாலில் இந்த பயிற்சியை அளித்து வருகிறார்.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்…

“இந்த பயிற்சியில் ஒவ்வொரு பேட்ஜ்க்கும் 75 முதல் 100 போலீஸ் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். டிஐஜி ஆனி விஜயா இந்த பயிற்சியை ஒருங்கிணைத்து வருகிறார். இதில் இன்னாள் அதிகாரிகள் மட்டுமின்றி முன்னாள் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். மன நல மருத்துவர்களும், சட்ட அறிஞர்களும் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கிறார்கள்” என்றனர்.

மேலும் அவர்கள், “தினமும் ஆயிரம் டென்ஷனுடன் இரவும் பகலுமாக வேலை பார்க்கிறோம். இதனால் தான் காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கோபத்தை கொட்டி அவர்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொள்கிறோம். மன அழுத்தமே இதற்கு முக்கிய காரணம். அதனால் தமிழக போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானது. இந்தசூழலில்தான் டிஜிபி பயிற்சி கொடுக்கிறார்.

இதில், குற்றவாளிகளைச் சட்ட ரீதியாகத் தண்டிக்க வேண்டும்.சட்டத்தை நாம் கையில் எடுக்கக்கூடாது, சட்ட ரீதியாகத் தண்டிக்க என்னனென்ன செய்யவேண்டும் எனப் பல ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள்.

பயிற்சி வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது மதியம் 12.00 மணியளவில் டிஜிபி சைலேந்திரபாபு வருவார். அப்போது இரண்டு வீடியோக்களை போட்டு காண்பிப்பார்.

அதில் ஒரு வீடியோவில், ‘ஒரு பெண் காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்க வருவார்.
அவரது பரிதாபத்தைப் பார்த்த ஒரு போலீஸ் அதிகாரி, நீங்கள் சாப்டீங்களா, இல்லை என்றால் சாப்பிடுங்கள். உங்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்கிறோம். வீட்டுக்கு செல்ல கையில் பணம் இருக்கிறதா என கேட்டு, ஒரு ஆட்டோவை வரவழைத்து, ஆட்டோவுக்கும் பணம் கொடுத்து அனுப்பி வைப்பார்.

DGP Sylendra Babu Training programme

இரண்டாவது வீடியோவில், ஒரு பெண் காவல் நிலையத்துக்கு வருவார். அவரிடம் அங்கிருக்கும் போலீஸ் அதிகாரி எரிந்து விழுவதுபோல் பேசுவார். சனியனே, நாங்கள் என்ன செய்வது என அநாகரிகமாக பேசுவார்.

இந்த இரண்டு வீடியோவும் ஒளிபரப்பாகி முடிந்ததும், முதல் வீடியோவில் இடம்பெற்ற அதிகாரி போலத்தான் தமிழக போலீசார், புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்கள்தான் காவல்துறை மீது மக்களுக்கு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும் என்று அறிவுரை வழங்குவார் டிஜிபி.

அதோடு, பயிற்சியில் கலந்துகொள்ளும் காவல் ஆய்வாளர்கள், டிஎஸ்பிகளுடன் மதிய உணவு அருந்திவிட்டு ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொள்வார். இப்படி எடுக்கும் ஃபோட்டோக்களின் காப்பியை அந்தந்த போலீஸ் அதிகாரிக்கும் காவல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.

டிஜிபி எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, எங்களுக்கு ஏதோ ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல் இருக்கிறது.

வரும் மே மாதம் வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது” என்றார்கள் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று பயிற்சி பெற்ற சில போலீஸ் அதிகாரிகள்.

வணங்காமுடி

மானிய கோரிக்கையை விமர்சித்த காவலர்கள் பணியிடை நீக்கம்!

அதிமுக – பாஜக மோதல்: டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share