கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீஸ் டீம்… பாராட்ட நேரில் செல்லும் டிஜிபி!

தமிழகம்

ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீஸ் டீமை நாளை (அக்டோபர் 2) டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து பாராட்டி வெகுமதி அளிக்கிறார்.

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி அதிகாலை கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து மூன்று ஏடிஎம்-களில் வடமாநில கொள்ளை கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்செல்வதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி போலீசாரின் தடுப்புகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்ற போலீசார் கொள்ளையர்கள் ஐந்து பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

லாரியின் கண்டெய்னரை போலீசார் திறந்தபோது, அதில் பதுங்கியிருந்த கொள்ளையன் போலீசாரை தாக்க முயற்சித்ததாகவும், இதனால் தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் கொள்ளையன் உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு கொள்ளையன் தப்பிக்க முயன்றபோது போலீசார் அவர் காலில் சுட்டு பிடித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து ஐந்து கொள்ளையர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து போலீசார் வட்டாரங்களில் விசாரித்தோம்…

“கேரள ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஹரியானா – ராஜஸ்தான் பார்டரில் உள்ள ஹவாட் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதியில் மட்டும் 45 ஏடிஎம் கொள்ளையர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது ஒரு டீமுக்கு ஏழு பேர் இருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் டிரைவர்கள். ஹரியானாவில் இருந்து கொள்ளையடிக்கும் இடத்திற்கு கண்டெய்னர் லாரியில் டிரைவர்கள் இரண்டு பேரும் வருவார்கள். மற்ற ஐந்து பேரும் சம்பவம் செய்யப் போகும் மாநிலத்திற்கு விமானத்தில் சென்றுவிடுவார்கள்.

முதல் நாள் காரில் சென்று எந்தெந்த ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கலாம், பாதுகாப்பு, செக்யூரிட்டி இல்லாத இடங்களை நோட்டமிடுவார்கள். பின்னர் அந்த காரை கண்டெய்னருக்குள் ஏற்றிவிடுவார்கள்.

அதிகாலையில் 1 மணிக்கு மேல் கண்டெய்னர் லாரியை பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு காரில் ஏடிஎம்களுக்கு சென்று கொள்ளையடித்துவிட்டு மீண்டும் கண்டெய்னருக்குள் காரை நிறுத்திவிடுவார்கள்.

ஏடிஎம்களை கேஸ் கட்டர் வைத்து உடைத்துவிட்டு, சத்தம் கேட்காத அளவில் உளி போன்ற ராடு இரும்பு உதவியுடன் ஏடிஎம்களில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.

கண்டெய்னர் மற்றும் காரில் உளி, ராடு, கேஸ் கட்டர் போன்ற வெப்ன்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். துப்பாக்கி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை. போலீஸ் செக்கப் வந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக ஆயுதங்கள் பயன்படுத்துவதில்லை என்கிறார்கள்” போலீஸ் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு, நடைபெற்ற இந்த சேஸிங்கில் கொள்ளையர்களை கச்சிதமாக பிடித்த நாமக்கல் போலீஸ் டீமை தமிழகம் மட்டுமல்லாது கேரள போலீசாரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் தான், போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் கொள்ளையர்களை பிடித்த நாமக்கல் போலீஸ் டீமை டிஜிபி சங்கர் ஜிவால் நாளை பாராட்டி வெகுமதி அளிக்கிறார்.

நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார் சங்கர் ஜிவால். அங்கிருந்து சாலை வழியாக நாமக்கல் செல்லும் சங்கர் ஜிவால், எஸ்பி அலுவலகத்தில் நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணா, டிஐஜி உமா, நாமக்கல் மாவட்ட ஏட்டு முதல் எஸ்.பி வரையில் 25 பேருக்கு வெகுமதியும் பாராட்டு சான்றிதழும் அளிக்கிறார். மேலும், டிஎஸ்பி, எஸ்பி-க்கு 50 ஆயிரமும் மற்றவர்களுக்கு 25 ஆயிரம், 10 ஆயிரம் என வெகுமதி கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: 5 மணி நிலவரம்!

ரஜினிக்கு என்னாச்சு? – அப்பல்லோ மருத்துவமனை ஹெல்த் ரிப்போர்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *