திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று (ஜனவரி 25) சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இங்கு கால் வைத்தாலே ஏழரை சனி, அஷ்டமத்துவ சனி, சனி திசை போன்ற அனைத்து விதமான சனி தோஷங்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று நம்பிக்கை.
சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் வெளி மாவட்டத்தில் இருந்தும், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிவார்கள்.
தள்ளு முள்ளு

அந்தவகையில் இன்று (ஜனவரி 25) தர்ப்பாரண்யேசுவரை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது பக்தர்களிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், குழந்தைகளோடு வந்தவர்களும், பெண்களும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
இந்தநிலையில் அங்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களை வரிசையில் அனுப்பினர். தொடர்ந்து சனீஸ்வர பகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். சாமியை தரிசனம் செய்த பின்னர் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலையிலும் கூட்டம்
இதுபோன்று சனி ஞாயிறு விடுமுறை தினத்தை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், சிவன் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என ஏராளமானோர் குவிந்ததால் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.