பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று (அக்டோபர் 26) மாலை ஒப்படைத்தார்.
முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில், இந்த விழாவில் தேவர் தங்கக் கவசம் பெறுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் இருந்து வந்தது.
அந்த தங்க கவசத்தை எடுத்துச் சென்று தேவர் சிலைக்கு அணிவிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி விசாரிக்கப்பட்டு பின்னர் விசாரணை அக்டோபர் 26 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இன்று (அக்டோபர் 26) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், தேவர் தங்கக் கவசத்தை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார்.
மேலும் அதனை மாவட்ட கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மீண்டும் வங்கியில் வைக்கப்படும் வரை ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை அண்ணா நகர் வங்கியில் இருந்த தேவர் தங்கக் கவசம், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று மாலை ஒப்படைத்தார்.
இதனைதொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேவர் தங்கக் கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மோனிஷா
T20 WorldCup 2022: கடைசி ஓவரில் விதிமுறை மீறிய பாகிஸ்தான் வீரர்!
ராமேஸ்வரம் கடல்: தீர்த்தமா? கழிவுநீரா? நீதிபதிகள் காட்டம்!