மதுரை மெட்ரோ : 75 நாட்களில் விரிவான அறிக்கை!
மதுரை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையைத் தொடர்ந்து, மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், 75 நாட்களில் மதுரை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநகர் மக்களின் வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும். மதுரையில் முதல் கட்ட திட்டம் 18 ரயில் நிலையங்களுடன் 31 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரையிலான போக்குவரத்து திட்டமாகும்.
ரயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் இந்த அறிக்கையில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
“இனிதான் எடப்பாடியின் வேகத்தைப் பார்க்கப்போகிறீர்கள்”: சி.விஜயபாஸ்கர்