வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழையும் பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் தெற்கு அந்தமானையொட்டிய வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 18ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியிலும், நாளை முதல் 18ம் தேதி வரை, மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
திருப்பதியில் ரஜினி சாமி தரிசனம்!
காசியில் கச்சேரி : வாய்ப்பை பெற்ற முதல் தமிழர்!