ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சனிடம் போலீசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பலதரப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் நபர்களான சம்பவ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இவர்கள் யார் யாரிடம் பேசியுள்ளார்கள் என்று போலீசார் ஆராய்ந்ததில், விஜய், ரஜினி பட இயக்குநரான நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா இவர்களிடம் பேசியிருப்பது தெரியவந்தது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மோனிஷாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி ஆஜரான அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னரும் மொட்டை கிருஷ்ணன் மற்றும் சம்பவ செந்திலுடன் மோனிஷா பேசியிருப்பது தெரியவந்தது.
மோனிஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நெல்சனிடம் இன்று (ஆகஸ்ட் 24) போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு நெல்சன் தரப்பு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், “இன்று நெல்சனிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை.. அவருக்கு சம்மனும் அனுப்பவில்லை. ஆனால் அவர் விசாரணைக்கு உட்படுவார். அதற்கான காரணமும், ஆதாரங்களும் உள்ளன. விரைவில் விசாரணை வளையத்துக்குள் வருவார்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் : காரணம் என்ன?
கார் பந்தயத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு : உதயநிதி பேட்டி!