கடந்த ஒரே வாரத்தில் தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சென்னையில் 4 வயது சிறுவன் மற்றும் புதுச்சேரியில் 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூரில் 6 பேருக்கும், கும்பகோணத்தில் 3 பேருக்கும், புதுக்கோட்டையில் 5 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தகவலில், “கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் தொடங்கி 13 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 7 நாள்களில் மட்டும் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. 50 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதையடுத்து, கடந்த 2 வாரங்களில் 37 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தந்த மாநகராட்சிகள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பே ஏடிஎஸ் கொசுப் புழுக்களை அழிக்க மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
காய்ச்சல் ஏற்பட்டால் தாமதப்படுத்தாமல் பொதுமக்கள் உடனே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த பரிசோதனை செய்து நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்ய வேண்டும்.
டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது” என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
மோனிஷா
Asia Cup: ’மேட்ச் பிக்சிங் செய்த இந்திய அணி..?’ அக்தர் ஆத்திரம்!
‘சனாதனத்தை ஒழிக்கத்தான் “இந்தியா” கூட்டணி’: கொந்தளித்த மோடி