தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை டெங்கு பரவல் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். dengue fever spread extends till December
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளிக்கான சிறப்பு தீக்காய பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவம்பர் 8) திறந்து வைத்தார்.
இதற்காக 20 படுக்கைகளுடன் கூடிய ஒரு தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு 12 படுக்கைகள், பெண்களுக்கு 8 படுக்கைகள் என இந்த வார்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தீக்காய பிரிவு வார்டை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“அனைத்து வசதிகளுடனும் இந்த தீக்காய சிறப்பு பிரிவு திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், இங்கு வெடி விபத்து ஏற்பட்டு யாரும் சிகிச்சைக்கு வர கூடாது என்பது தான் எங்களுடைய எண்ணம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தான் இந்த வார்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசு அனுமதி கொடுத்துள்ள நேரத்தில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அறிவுறுத்தலின் படி பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தீக்காயங்களுக்கான மருந்துகள் இருக்கும். ஆனால் சிறப்பு வார்டுகள் 95 இடங்களில் இருக்கும்.
இந்த 95 இடங்கள் என்பது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் என்று சிறப்பு வார்டுகள் இருக்கும். தமிழகம் முழுவதும் தீக்காயங்களுக்காக 750 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “தமிழகத்தில் இதுவரை 6,345 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவல் டிசம்பர் வரை தொடரும். அந்த நேரத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,500 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால், மழை நீர் தேங்குவதால் ஏடிஎஸ் கொசு வகை அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவலாம். டெங்கு பரவல் எப்போதும் வடகிழக்கு பருவமழையின் போது அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கோடை மழை என தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இருந்தாலும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் தான் இருக்கின்றது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார். dengue fever spread extends till December
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அர்ச்சகர் நியமனம்: மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
இரண்டரை வருட ஆதிக்கம்… பாபர் அசாமை வீழ்த்தி சுப்மன் கில் முதலிடம்!