அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, மதுரையில் நேற்று (செப்டம்பர் 27) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் உரிமைகளுக்கான மாநில கிளை சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரியில் சென்ற ஆகஸ்ட் மாதம் நடந்த தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் உரிமைகளுக்கான சங்கப் பேரவைக் கூட்டத்தில்
காது கேளாதோர் வாய் பேசாதோர் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களில் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் காது கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில் வேலைபார்ப்பவர்களை அரசாணை எண் 151-இன் படி உடனடியாக நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும்.
அரசு பணிகளில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கு ஒரு சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தனியார் துறை நிறுவனங்களில் காது கேளாதோர் வாய் பேசாதோர் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும்.
கடுமையாக பாதிக்கப்பட்ட காது கேளாதோர், வாய் பேசாதோர் ஆகியோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைத்து அவர்களுக்கு மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி,
மதுரையில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் உரிமைகளுக்கான மாநில கிளை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, கல்வித்துறைகளில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
காவல்துறை உதவி எண் 100 மற்றும் 108 வாட்ஸ்அப் செயலி உருவாக்க வேண்டும்.
வாட்ஸ்அப்பில் மாற்றுத்திறனாளிகள் சைகை மொழி பேசுவோர் புகார் கூறினால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசினர்.
ராஜ்