நான் நித்யானந்தாவா? இடிக்கப்பட்ட ஆசிரமம்!

Published On:

| By Prakash

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நித்யானந்தா ஆசிரமம் எனக் கருதி வேறொரு சாமியாரின் ஆசிரமத்தை மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சாமியார் பாஸ்கரனாந்தா. இவர் திருப்பூர் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டையில் ஆசிரம் அமைக்கத் திட்டமிட்டார். அதற்காக 2018ம் ஆண்டே செல்வக்குமார் என்பவருக்குச் சொந்தமான இடத்தை, ஒன்றரை கோடி ரூபாய் முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். கொரோனா தொற்றால் கட்டடப் பணிகள் தாமதமாக நடைபெற்ற நிலையில், தற்போது அவை முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் அந்த ஆசிரம கட்டடத்தில், தனது அறையில் இருந்த 25 சவரன் நகைகள் காணாமல் போனதாக பல்லடம் காவல் நிலையத்தில் பாஸ்கரனாந்தா புகார் அளித்தார். மீண்டும் அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில்… ஆசிரம கட்டடம் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் கொண்டு முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

demolition of samiyar ashram

வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்த பாஸ்கரனாந்தாவுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, பல்லடம் திரும்பிய அவர், காவல் நிலையத்தில் நேற்று (அக்டோபர் 3) புகார் அளித்துள்ளார்.

முன்னறிவிப்பு இல்லாமல் மர்மநபர்கள் திட்டமிட்டு தனது ஆசிரமத்தை இடித்து தரைமட்டமாக்கி உள்ளதாக புகாரில் பாஸ்கரனாந்தா தெரிவித்துள்ளார். தோற்றத்தில் நித்யானந்தா போன்று இருப்பதால், மர்மநபர்கள் தனது ஆசிரமத்தை இடித்திருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

demolition of samiyar ashram

இதுகுறித்து பாஸ்கரனாந்தா, “இந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம் என்றிருந்தேன். அதற்குள், நான் கட்டிய கோயில் இடிக்கப்பட்டுவிட்டது. இந்த இடத்தை விற்றவருக்கும் வங்கிக்கும் ஏதோ பிரச்சினை உள்ளது. இதை யார் இடித்தார் என தெரியவில்லை. இதை இடிப்பதற்கு முன்னதாகவோ அல்லது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவோ என்னிடம் தெரிவித்திருக்கலாம்” என்றார்.

நித்யானந்தா போன்று தோற்றம் கொண்டிருப்பதால் பாஸ்கரனாந்தாவின் ஆசிரமம் இடிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

குட்கா விற்பனை: இந்து முன்னணி தலைவர் கைது!

காங்கிரஸ் தேர்தல்: விமர்சித்த பாஜவுக்கு சிதம்பரம் பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share