தீண்டாமை சுவர் இடிப்பு: முள்வேலியை அகற்றுவது எப்போது?

தமிழகம்

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை அடுத்த தோக்கமூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட தீண்டாமை சுவர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் இன்று(அக்டோபர் 3) அகற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தோக்கமூரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் விவசாயக் கூலிகளாகவே இன்றளவும் உள்ளன.

தோக்கமூர், எல்.ஆர்மேடு, எடகண்டிகை என மூன்று ஊருக்கும் பொதுவானதாக திரௌபதியம்மன் கோவிலும் கோவிலைச் சுற்றி அரசிற்கு சொந்தமான 2.94 ஏக்கர் புறம்போக்கு நிலமும் உள்ளது.

தலித் மக்கள் அப்பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக கோயிலை சுற்றியும் அதையொட்டிய மைதானத்தை சுற்றியும் 90 மீட்டர் நீளமும் 8 அடி உயரமுள்ள தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டது.

மேலும் சுற்று சுவரை ஒட்டிய இடத்தில் சிமெண்ட் கற்களால் ஆன முள்வேலியை கோயில் நிர்வாக தரப்பினர் அமைத்தனர்.

பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கவும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் நியாய விலை கடை உள்பட பல்வேறு தேவைகளுக்கு இந்த அரசு புறம்போக்கு நிலத்தையே நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் முள்வேலி அமைப்பட்டதால் பாதிக்கப்பட்ட அவர்கள், உடனடியாக அகற்றுமாறு அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை தாமதமானதால், இந்த விவகாரத்தை பல சமூக அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் கையில் எடுத்தன.

மேலும் பிரச்சனைக்கு உரிய முள்வேலி மற்றும் தீண்டாமை சுவரை அகற்ற வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தும், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைநடத்தியும், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

மார்ச் 24,2022 அன்று சிபிஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சின்னதுரை அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சட்டமன்றத்திலும் தனது கருத்தை சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்
இந்த தீண்டாமை சுவரை உடனடியாக இடிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

கடந்த மே 30 அன்று மக்கள் சார்பில் அரசு அதிகாரிகளிடம் தீண்டாமை சுவரை அகற்றிட கோரி மனு அளிக்கப்பட்டது.

அக்டோபர் 5ம் தேதிக்குள் தீண்டாமை சுவர் அகற்றப்படாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி அறிவுறுத்தலின்படி, வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை அடுத்த தோக்கமூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 2015 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தீண்டாமை சுவர் இன்று இடிக்கப்பட்டது.

பின்னர் சிமெண்ட் கற்களால் அமைக்கப்பட்ட முள்வேலியையும் அகற்ற வேண்டுமென கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சமரச பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, புகார் அளித்தால் திரௌபதி அம்மன் கோவிலை சுற்றி போடப்பட்ட முள்வேலி அகற்றப்படும் என வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

வினோத் அருளப்பன்

புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

நீட் அசல் விடைத்தாளை காண்பிக்க உத்தரவு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.