ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அரசு ஐஆர்டி மருத்துவமனையில் விரைவில் சூப்பர் ஸ்பெஷாலிடி பிரிவைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சேலம்- கொச்சி நெடுஞ்சாலையில் பெருந்துறையில் ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 308 ஏக்கர் பரப்பளவில் காசநோய் மருத்துவமனை உருவாக்கப்பட்டது. இது, காலப்போக்கில் மருத்துவக் கல்லூரியாக மாறியது,
1992இல் (ஐஆர்டி) போக்குவரத்துத்துறை கையில் எடுத்து நடத்தி வந்தது. இதை 2019 இல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தமிழக அரசு கையகப்படுத்தி அரசு ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என பெயர் வைத்தது.
இந்த மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர் ஐயப்பனிடம் சிகிச்சை எடுத்து வந்தனர்.
இந்த மாவட்டத்தில் சாயக் கம்பெனி, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சிப்காட் போன்ற கம்பெனிகள் அதிக அளவில் இருக்கின்றன. இதனால் காற்று, நீர், மண் ஆகியவை மாசு அடைகின்றன. இதோடு இம்மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 2000 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதாரத் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இப்படி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐயப்பன் சிகிச்சை அளித்து வந்தார். அதாவது பெருந்துறை ஐஆர்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு இல்லை என்றாலும் தானே இதற்கென ஒரு பிரிவை உருவாக்கி படுக்கை வசதிகளை ஏற்படுத்தி சிகிச்சை அளித்து வந்தார்.
இவரை திடீரென தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசு இடம் மாற்றம் செய்தது. இதுகுறித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு கொடுத்தனர்.
இதுதவிர முதல்வருக்கு தபால் மூலமும் கடிதம் அனுப்பினர். அதில், “ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு டாக்டர் இல்லாமல் துடித்து போய் இருக்கிறோம், எங்களுக்கு சேவை செய்துவந்த கேன்சர் டாக்டர் ஐய்யப்பனை மீண்டும் ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்” என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள செல்வராஜ் நம்மிடம் கூறுகையில், “புற்றுநோய் பாதிப்பு எங்கள் மாவட்டமான ஈரோட்டில் தான் அதிகம் இருக்கிறது, குறிப்பாக தாளவாடி பகுதியில் அதிகமாக உள்ளது,
எங்களைப் போன்ற புற்று நோயாளிகளுக்கு பெருந்துறை மருத்துவமனை இல்லை என்றால் இந்த பக்கம் கோயம்புத்தூர், அந்தப் பக்கம் சேலம் போகவேண்டும். அவ்வளவு தூரம் பயணிக்கவும், செலவு செய்யவும் கஷ்டமாக இருக்கிறது.
இந்த நிலையில்தான் அரசு ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு டாக்டர் ஐய்யப்பன் சிகிச்சை கொடுக்கிறார் என்று தகவல் கேள்விப்பட்டேன்.
2019 கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் வரையில் என்னை போன்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தோம், திடீரென அந்த டாக்டர் ஐயப்பனை தஞ்சாவூருக்கு மாற்றிவிட்டனர்” என வருத்தத்தோடு கூறினார்.
மேலும் அவர், “ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு (சூப்பர் ஸ்பெஷாலிடி பிரிவு) கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது, முதல்வர் ஸ்டாலின் இந்த சூப்பர் ஸ்பெஷாலிடி பிரிவு மருத்துவமனையை விரைவாக திறந்தால் எங்களைப் போன்ற புற்றுநோயாளிக்களுக்கு பலனாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து டாக்டர் ஐய்யப்பனை (ஹீமோ தெரபி ஸ்பெஷலிஸ்ட்) தொடர்பு கொண்டு பேசினோம்,
“புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புறநோயாளியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 பேர் வருவார்கள், 50 படுக்கைகள் உள்ளன. அதிலும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.
அவரிடம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏன் தஞ்சாவூருக்கு பணியிட மாறுதலில் சென்றீர்கள், உங்களை நம்பி இருந்தவர்களுக்கு யார் சிகிச்சை கொடுப்பார்கள்? என்று கேட்டோம்.
இதற்கு பதிலளித்த அவர், “நான் பணியிட மாறுதல் கேட்கவில்லை, இது அரசு முடிவு, மக்களை நினைத்தால் கஷ்டமாகத்தான் உள்ளது, உண்மையில் அந்த மருத்துவமனையில் கேன்சர் பிரிவு இல்லை.
தற்போது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிடி பிரிவு கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. அதில் கேன்சர் பிரிவு உள்ளது, அரசு நிச்சயம் விரைவில் சூப்பர் ஸ்பெஷாலிடி பிரிவைத் திறக்கும். அப்போது என்னை நியமிப்பார்கள் எமது பணியைத் தொடர்வேன், அதுவரையில் கேன்சர் பேஷன்ட்கள் சேலம் கோவைக்குதான் சென்று வரவேண்டும் அங்கும் நல்ல சிகிச்சை கொடுப்பார்கள்” என்றார்.
அன்றாடம் துடிதுடித்து வரும் புற்றுநோயாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?.
வணங்காமுடி
World Championship: ஒரே வீச்சில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ்
பெண்களை குறிவைத்து பேசுவதா?: ஹெச்.ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!