திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழா இந்தாண்டு வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான உற்சவங்கள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக தீபத்திருவிழாவையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தொடர்ந்து கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த திருவிழாவில் கடந்த ஆண்டு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “மகாதீபம் ஏற்ற திருவண்ணாமலை தீபமலையின் மீது 350 கிலோ எடை கொண்ட கொப்பரை, திரிகள் மற்றும் 40 டன் நெய்யை மேலே எடுத்துச் செல்ல வேண்டும். அண்மையில் ஏற்பட்ட மலைச்சரிவால் எதுவும் பாதிக்கப்படாது. இந்தாண்டு திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் எரியும். மலை மீது தீபம் ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்ப மனித சக்தியை பயன்படுத்துவோம். எந்தவித சிறு அசாம்பாவிதமும் இல்லாமல் வெற்றிகரமாக தீபத்திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த நிலையில் தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான இன்று 10 ஆம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகா தேரோட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து 13ஆம் தேதியன்று காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் காண வரும் பக்தர்களின் வசதிக்காக 9 வழிகளில் பேருந்து வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு மொத்தம் 10,109 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

குறிப்பாக வேலூர், செங்கம், திண்டிவனம், திருக்கோவிலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் அதிக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும் 24 தற்காலிக பேருந்து நிலையங்களும், அதில் ரெடிமேட் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்களுக்காக தற்காலிகமாக 2 பேருந்து நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேன், கார், ஆட்டோ மற்றும் இருச்சக்கர வாகனத்தில் வரும் பக்தர்களுக்காக 50 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான லொக்கேசன் கோடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சமூகவலைதளங்கள் மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கிரிவல பாதையைச் சுற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்பட உள்ளது.

15,000 போலீசார் குவிப்பு!
சிறப்பு வாய்ந்த தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், 3 டிஐஜி, 10 எஸ்பி, 45 ஏடிஎஸ்பி, 150 டிஎஸ்பி, 250 இன்ஸ்பெக்டர் உட்பட 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவிலை சுற்றிலும் 4000 சிசிடிவி கேமிராக்களும், கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் 20 ட்ரோன்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரே நேரத்தில் பார்வையிட தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட உள்ளது.
ஐஜி அறிவுறுத்தல்!
இதற்கிடையே நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்த ஐஜி அஸ்ரா கர்க், “நம்ம தமிழ்நாடு போலீஸ் இந்தியாவிலேயே சிறப்பான போலீஸ் என பெயர் பெற்றுள்ளது. திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு, சிறப்பான ஒத்துழைப்பு போலீசார் வழங்க வேண்டும்.
ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ ஆகியோர் பணி செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிற்க வேண்டும் . இல்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வணங்காமுடி, கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘கல்வி உதவி தொகை வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும்’ : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!
25 Years of Bala : தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தை காட்டிய பாலா