உருவானது ‘மிதிலி’: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த நவம்பர் 14 ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 17) புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த ‘மிதிலி’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயலானது நாளை காலை வங்கதேசத்தில் சுமார் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மிதிலி புயல் ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஒரே நாளில் ரூ.520 உயர்ந்த தங்கம் விலை!
புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் விடுதலை 2!