சிறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் குறைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 18) 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் 5.50 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின்,
“சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் (small apartments) உள்ளன.
அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்கீழ், பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறையும்.
இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
நாவலூரில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது: தமிழ்நாடு அரசு
லியோ திரைப்படம்: இணையத்தில் வெளியிட தடை!
லியோ புக்கிங்கை தொடங்காத சென்னை தியேட்டர்கள்… ’ரோகிணி’ அதிர்ச்சி முடிவு!