தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசாரே விசாரிக்க வேண்டுமென்ற தீர்ப்பை மாற்றியமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், கல்வித்துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு பின் தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று(அக்டோபர் 19) விசாரணைக்கு வந்த போது மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகினார்.
ஜூலை 18ஆம் தேதி உத்தரவுக்கு பிறகு தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 11 மரணங்கள் குறித்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கென பிரத்யேகமாக சிபிசிஐடி உருவாக்கப்பட்டதாகவும், எந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென வழக்கின் தன்மை குறித்து டிஜிபி முடிவு செய்வதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக காவல்துறையில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவு காரணமாக ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவையும் மாற்றியமைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசாரே விசாரிக்க வேண்டுமென்ற தீர்ப்பை மாற்றியமைத்து உத்தரவிட்டார்.
இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாரே விசாரிக்கலாம் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.
அதேபோல , கல்வித்துறை விசாரணைக்கு பின்னர் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்த நீதிபதி சதிஷ்குமார், வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.
மேலும், மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.
கலை.ரா
முத்துராமலிங்க தேவர் தங்கக்கவச வழக்கு: ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு!
துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம்!