மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி பகுதியில் உள்ள மீனவர் கிராமமான எக்கியார்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதில் 3 பேர் நேற்று உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் முண்டியம்பாக்கம், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மரக்காணம் அருகே ஈசிஆர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் (அமரன்) அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை ராஜ மூர்த்தி, மலர்விழி, மன்னாங்கட்டி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து இன்று (மே 15) விஜயன், சங்கர், சரத்குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 9 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
மோனிஷா
அடுத்தவருக்கு குறிவைத்து வெடிகுண்டு செய்த ரவுடி கவலைக்கிடம்!
முதல்வர் பதவிக்கு மோதல்: சிவக்குமார், சித்தராமையாவின் அடுத்த மூவ் என்ன?