கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் காலனியை சேர்ந்த பலர் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகளால் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 5 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இன்று காலை பேசுகையில், “கள்ளச்சாராய உயிரிழப்பு பற்றிய விசாரணை அறிக்கை தமிழக அரசிற்கு அனுப்பப்படும்.
பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்” எனக் கூறினார்.
மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது. அதேபோல், தற்போது கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
முன்னதாக, பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த போது அம்மாநில முதல்வரான நிதிஷ்குமார் “எந்தவித நிவாரணமும் வழங்க முடியாது” என்று கூறினார். இதை கருத்தில் கொண்டு பலரும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடாது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 20) நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து விசாரிக்க ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனையின் முடிவில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணம் : ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவு!
”என்னை விமர்சித்தவர்களுக்கு ‘மகாராஜா’ பதில் கொடுத்துவிட்டது” : விஜய் சேதுபதி