சிறுமி டானியா பள்ளிக்கு செல்லத் தொடங்கிவிட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். ஆகவே, தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பூந்தமல்லி அருகே உள்ள தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி சிறுமி டானியாவுக்கு, 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு, செப்டம்பர் மாதத்தில் சிறுமி டானியா வீடு திரும்பினார்.இந்நிலையில், முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், பேச, சாப்பிட எளிதாக வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்தார்.
அதற்கு தீர்வு காண கடந்த ஜனவரி 5-ம் தேதி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு, 2 ஆம் கட்ட அறுவை சிகிச்சை 11 மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
சில நாட்களில் சிறுமி டானியா வீடு திரும்பினார். தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டானியா வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், இரு கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்ற சிறுமி டானியா இல்லம் தேடி கல்வி மூலம் 4 ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பின்னர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில், சிறுமி டானியா பள்ளிக்கு செல்ல துவங்கியதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஏப்ரல் 11) வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள டானியாவுக்கு, பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி! ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஹெட்லைன்ஸ் வேணுமா… உண்மையா?: கோபப்பட்ட அஷ்வின் —
யாத்திசை…பொன்னியின் செல்வனுக்கு போட்டியா? இயக்குனர் பதில்!