ஸ்ரீராம் சர்மா
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி; இந்த நாடே இருக்குது தம்பி” என்றொரு பாடல் உண்டு.
எந்த பிள்ளை நல்ல பிள்ளை ?
பெற்றவரும் பிறந்த பொன்னாடும் பெருமை கொள்ளத்தக்க வகையில் வளர்ந்து வாழ்வதுதான் நல்ல பிள்ளைக்கான அழகு!
பெருமைபட வாழ்வது என்றால் என்ன?
மருத்துவர் ஆவது பெருமை என்றால், மருத்துவருக்கு உடை தைத்துக் கொடுப்பதும் பெருமைதான்! ஐஏஎஸ் ஆவது பெருமை என்றால் அந்த ஐஏஎஸ்ஸை அமர வைத்து பத்திரமாக காரோட்டிக் கொண்டு போவதும்தான் பெருமைதான்! ஐபிஎஸ் ஆவது பெருமை என்றால், அந்த ஐபிஎஸ்ஸுக்கு பொருந்தக் காலணி தைத்துக் கொடுப்பதும் பெருமைதான்!
எந்தத் தொழிலும் நல்ல தொழில்தான்! அது, அதற்கான ஒழுக்கத்தோடு நிறைவேற்றப்படுவதுதான் பெருமை!
அன்றைய திருவல்லிக்கேணியில் ராமசாமி சலூன் கடை பிரசித்தமானது. ராமசாமி என்பவர் நாவிதர் மட்டுமல்லர், நல்ல நாயனக்காரர்! தீபாவளி நாளில் எங்கள் இல்லத்துக்கு வந்து நாதஸ்வரம் வாசிக்கும் அவருக்கு பட்டு வேட்டியும் அங்கவஸ்திரமும் வைத்துக் கொடுக்கும் எனது தந்தையார்…
நாதஸ்வரத்தில் “சின்னஞ்சிறு கிளியே” பாடலை இழைத்து வாசித்த அவருடைய கரங்களை இறுகப் பற்றியபடி “காருகுறிச்சி போல வாசிக்கிறீர்கள் ராமசாமி“ எனக் கண்கள் பனிக்க குனிந்து வணங்குவதைக் கண்டிருக்கிறேன். நாதஸ்வரக் கல்வியின் மீது ராமசாமி ஐயா காட்டிய அக்கறைக்குக் கிடைத்த அங்கீகாரம் அது!
பகட்டாக வாழ்வதல்ல வாழ்க்கை. பிறர் வாழ்த்தும்படி வாழ்வதே வாழ்க்கை!
கவனியுங்கள்!
கல்வியின் நோக்கம் அறிவு மட்டுமல்ல – ஒழுக்கமும் ஆகும்!
குறித்த காலத்தில் எழுவது. குளிப்பது. பொருந்த உடையணிவது. நோக்கத்துடன் பள்ளி நோக்கி நடப்பது. ஆங்கே, ஆசிரியர்களின் போதனைகளை பணிந்து உள்வாங்குவது. மேலும் அதைப் பெருக்குவது என்பதாக தொடர்ந்து நிகழும் ஒழுக்கப்பாட்டை நிலை நிறுத்த வழிகோலுவதே பள்ளிக் கல்வி!
ஒழுக்கம் தவறும் எந்தக் கல்வியும் வீணாகத்தான் போகும். ஒழுக்கம் என்பது எப்படி வரும்? கொண்ட வேலையைக் குறிக்கோளோடு செய்து முடிக்க, முடிக்க ஒழுக்கமானது தானாக வந்துவிடும்.
அந்த ஒழுக்கமானது எந்தக் காலத்திலும் தவறான சிந்தனைக்கு உங்களைத் தள்ளிவிடாது.
அண்மைக்காலமாக அங்குமிங்குமாக வரும் தகவல்கள் மன வேதனை அளிக்கிறது. தேர்வில் தோற்றதால் – தேர்வில் தோற்று விடுவோமோ என்னும் அச்சத்தால் தவறான முடிவுகளை எடுத்துவிடும் சில மாணவச் செல்வங்களின் இழப்பு தூக்கம் தொலைக்க செய்கிறது.
எனதருமை மாணவச் செல்வங்களே …
உங்கள் நோட்டுப் புத்தகத்தின் ஒரு பக்கத்தை திடீரென யாரேனும் சரேலெனக் கிழித்துக் கசக்கி எறிந்து விட்டால் உங்களது மனம் என்ன பாடுபடும் ? அதில் என்ன இருந்ததோ, அதை மீட்டெடுப்பது எப்படியோ என எப்படியெல்லாம் உங்கள் மனம் அழுது புலம்பும்?
அப்படித்தான் உங்கள் உயிரைச் சட்டென முடித்துக்கொள்ளும்போது உங்களைப் பெற்ற வயிறும் – இந்த சமூகமும் திகைத்துக் கதறி நிற்கும்.
மரணத்துக்குப் பிறகு நமக்கு என்னவாகும் என்பது நிச்சயமாகத் தெரியாது என்னும்போது அந்த மரணத்தை “தப்பித்தல்” எனக் கொள்வது மூடத்தனமாகும் அல்லவா ?
வாழ நூறு வழிகள் இருக்க மரணம்தான் முடிவா? அது கோழைத்தனம் அல்லவா?

தனது 16ஆவது வயதில் லண்டனின் “O Level” தேர்வின் மொத்த பாடங்களிலும் ஃபெயில் ஆன டயானா என்னும் மாணவி – பின்னாளில் அந்த நாட்டுக்கே இளவரசியாக வந்து நிற்கவில்லையா?
தோல்வி என்பது என்ன, தள்ளிப் போடப்பட்ட வெற்றிதானே!
தமிழகத்தின் மாணவச் செல்வங்களே தயவுகூர்ந்து கொஞ்சம் கவனியுங்கள்!
தாமஸ் எடிஸனை நீங்கள் அறிவீர்கள்!
1847இல் பிறந்து நவீன ஒலி, ஒளிக்கருவிகளோடு, திரைப்படக் கருவி உட்பட ஏறத்தாழ ஆயிரம் தொழில் நுட்பக்கருவிகளைக் கண்டடைந்து பெரும்பணக்காரராகத் திகழ்ந்து இன்றளவும் உலகத்தாரால் போற்றப்படும் தாமஸ் எடிஸனது ஆரம்பக் கல்வி தோல்விமயமானதே.
“உங்கள் குழந்தைக்கு எங்கள் பாடங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மூளை வளர்ச்சி இல்லை. இவனை திருப்பி அனுப்புகிறோம்” என அன்றைய ஆசிரியர்கள் சொன்னபோது – அவரது தாய் நான்ஸி எடிஸன் கொஞ்சமும் கொதித்தெழவில்லை.
மாறாக, “எனது குழந்தையை நானே வளர்த்தெடுக்க நல்லதோர் வாய்ப்பளித்தமைக்கு நன்றி“ என்றபடி விடைபெற்று வந்த அன்னையின் அன்பரவணைப்பில் ஆளாகி சாதித்த அந்த எடிஸன் 1831இல் கண் மூடிப் போனபோது உலகார்ந்த அறிஞர்களின் விழிகள் கலங்கிக் கசிந்தன.
ஆம், அமெரிக்க மண்ணில் வானோங்கி நிற்கும் சுதந்திர தேவி சிலையின் கையில் இருக்கும் அந்தத் தீப்பந்தத்தின் ஒளி அன்று மட்டுமே அணைக்கப்பட்டது என்பது வரலாறு. ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஓர் கணம் பட்டென இருளில் மூழ்கி, “போய் வாருங்கள் மேதையே…” எனக் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தது!

எடிஸனது புகழை இன்றளவும் உயர்த்திப் பிடிப்பது அவர் கொண்ட கல்வியா? அல்லது அயராத முயற்சியின் பாற்பட்ட வெற்றியா!? சிந்தித்துப் பாருங்கள்!
எடிஸன் மட்டுமல்ல, அன்றந்த அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையொப்பம் இட்ட மூவரில் ஒருவரான பெஞ்சமின் ப்ராங்கிளின் – அனிமேஷன் மேதையான வால்ட் டிஸ்னி – மெக் டொனால்டின் ராய் க்ரோக் – டைம் பத்திரிகையால் “நூற்றாண்டின் நாயகன்” எனக் கொண்டாடப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பற்பல மேதைகளின் பள்ளிக்கல்விக் காலங்களும் தோற்றுப் போனவைகளே!
ஆயினும் அவர்கள் முயன்றார்கள்! வென்றார்கள்!
அதுபோலவே உங்களாலும் வெல்ல முடியும்! இந்த உலகை ஒரு நாள் ஆள முடியும் என ஆழமாக நம்புங்கள்!
பேரன்பிற்கினிய மாணவச் செல்வங்களே…
உலக நாடுகள் அனைத்தும் இந்திய மண்ணை உற்று நோக்கியபடி பலபடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான காலம் இது! காரணம், இந்த மண்ணில் குவிந்திருக்கும் இளைஞர்களின் அளப்பரியதான எண்ணிக்கை!
குறிப்பாக, இந்தியத் திருமண்ணின் அறிவுக்கேந்திரங்களில் மிக முக்கியமானதான நமது தமிழகத்தை உலக நாடுகள் ஆழ்ந்து அளந்து கொண்டிருக்கின்றன!
அறிவின் பாற்பட்ட சதுரங்க விளையாட்டின் ஒலிம்பியாட்டை தன் வசப்படுத்தி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், அதன் துவக்க விழாவில் நிகழ்த்திய எழுச்சிமிகு பேச்சும் – விழாவைத் துவக்கி வைத்து போற்றுதலுக்குரிய பாரதப் பிரதமர் அவர்கள் பேசிய உணர்வுமிகு பேச்சும் தமிழகம்தான் இந்தியத்தின் அறிவுக்கருவூலம் எனப் பறைசாற்றி நின்றதைக் கண்டோமல்லவா ?
அப்படியான தமிழகத்தின் வரலாற்றுப் பெருமையை மென்மேலும் முன்னேற்றிச் செல்வது மாணவர்களாகிய உங்கள் கடமையாகிறது!

கடந்த 26ஆம் தேதி சென்னை குருநானக் கல்லூரியின் பொன்விழாவில் கலந்து கொண்டு பேருரை ஆற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…
“மாணவ மாணவிகளே, அண்மைக் காலமாக நடைபெற்றுவிட்ட சில சம்பவங்கள் எனக்கு மன வேதனை அளிக்கிறது. உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும்.
பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! என்று பாடினார் மகாகவி பாரதியார்.
மாணவியருக்கு மன ரீதியாகவோ – உடல் ரீதியாகவோ தொல்லை தரக் கூடிய எத்தகைய செயலையும் தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்காக பற்பல நலத்திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்தி நமது மாணவ சமுதாயம் மென்மேலும் உயர வேண்டும் என மனதார வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என நெகிழ்ந்து சொன்னார்.
அவரது தலைமையில் அமைந்திருக்கும் இன்றைய அரசாங்கமும் அதன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றிச் சுழன்றுக் கொண்டிருப்பதைக் கண்ணாரக் காண முடிகிறது.
இன்றைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப்பட்டவர் படித்தவராக, பண்பாளராக, சாதிக்கத் துடிக்கும் இளைஞராக அமைந்திருப்பது நல்வாய்ப்பு. தமிழகத்தின் பள்ளிக் கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்திவிட மாநிலமெங்கும் சுற்றிச் சுழன்று அரும்பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கும் அவரது பணியை பயன்படுத்திக் கொண்டு மேலும் உயர்வது மாணவ சமுதாயத்தின் பொறுப்பு!
ஏறத்தாழ 37,000 பள்ளிகளில் “மாணவர் மனசு” என்னும் புகார் பெட்டியினை அமைத்து – ஆவன செய்து வரும் அமைச்சர், மாணவ மாணவியரின் மன – உடல் நலம் பலமாக விளையாட சொல்லியும் ஊக்குவித்து வருகிறார். அதற்கான செயலியை அறிமுகப்படுத்தி மொத்த செலவையும் பள்ளிக் கல்வித் துறையே ஏற்கும் என்கிறார்.
பள்ளிக் கல்வித்துறையின் பற்பல நலத்திட்டங்கள் உங்களை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்தையும் பயன்படுத்தி இன்னுமின்னும் ஓங்கி உயர முயலுங்கள். உங்களை இந்த நாடும் – அரசாங்கமும் எந்த நிலையிலும் விட்டுக் கொடுத்துவிடாது என உறுதியாக நம்புங்கள்.
கிடைத்த கல்வி எதுவென்றாலும் அதனை முழுமையாகப் பயன்படுத்தி பெற்றவருக்கும் பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமை சேர்க்கும்படி உயர்ந்து நில்லுங்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதில்லை. ஆனால், கிடைத்த வாய்ப்புகளை ஆழ்ந்த நோக்கத்தோடும் அதற்கான ஒழுக்கத்தோடும் செய்து முடிப்பவரை இந்த உலகம் வாழ்த்தி வணங்காமல் இருந்ததில்லை.
எனதருமை மாணவச் செல்வங்களே…
உங்களை மன்றாடிக் கேட்டுக் கொண்டு முடிக்கிறேன்.
வாழப் பிறந்ததுதான் பூமி!
வழிமாறிப் போக வேணாம் சாமி!
கட்டுரையாளர் குறிப்பு

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.