ஆரம்பமே அதிரடி… முதல் ரிவ்யூ மீட்டிங்கில் கடுகடுத்த டேவிட்சன் தேவாசீர்வாதம்

Published On:

| By Selvam

தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், ஒவ்வொரு சரகம் வாரியாக ரிவ்யூ மீட்டிங் நடத்தி வருகிறார். அந்தவகையில், தனது முதல் ரிவ்யூ மீட்டிங்கை நேற்று (ஜூலை 20) விழுப்புரம் சரகத்தில் நடத்தி காவல்துறை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2021- ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மிக முக்கிய பதவியான உளவுத்துறை கூடுதல் டிஜிபி பதவி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு வழங்கப்பட்டது.  2023-ல் காவல்துறை தலைமையிட ஏடிஜிபியாக மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து சென்னை சிட்டி கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு அருண் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றது முதல்  தினமும் டிஎஸ்பி முதல் மண்டல ஐஜி மாநகர ஆணையர் வரையில் அனைவரையும் தொடர்புகொண்டு தினமும் ரிபோர்ட் கேட்கிறார் என்கிறார்கள் டிஜிபி அலுவலகத்தில் உள்ளவர்கள்.

மேலும், ஒவ்வொரு மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல், அவர்கள் வழக்கு விபரம், சிறையில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள், வாரண்ட் உள்ளவர்கள், நீண்ட நாட்கள் நீதிமன்றம் வராமல் இருப்பவர்கள், இல்லீகல் பிசினஸ் செய்பவர்கள், இல்லீகல் பிசினஸ் பார்ட்டிகளுடன் தொடர்பில் உள்ள போலீஸ் மற்றும் அதிகாரிகள் பட்டியலையும் சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவியேற்ற உடன் விழுப்புரம் சரகத்திற்குட்பட்ட தனது முதல் ரிவ்யூ மீட்டிங்கை நேற்று ஜூலை 20 ஆம் தேதி கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடத்தியுள்ளார்.

கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், கடலூர் எஸ்.பி ராஜாராம், விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவாஜ், கள்ளக்குறிச்சி எஸ்.பி ராஜத் சதுர்வேதி மற்றும் மூன்று மாவட்டத்தின் ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பிக்கள் பங்கேற்றனர்.

மூன்று மணி நேரம் நடந்த கூட்டத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசும்போது, “தமிழ்நாடு காவல்துறை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. நம்மிடம் நவீன டெக்னாலஜி, போதுமான காவல்துறை ஸ்ட்ரெங்த் இருக்கிறது. குற்றங்களை விரைவில் கண்டுப்பிடிப்பதில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

ஆனால், பொதுமக்கள் மத்தியில் இணக்கமாக போக முடியவில்லை. ஏன்? காவல் நிலையத்திற்கு வரும் மக்களுடன் அன்பாக பேசுங்கள். அவர்கள் குறைகளை காது கொடுத்துக் கேளுங்கள். அப்போதே அவர்களின் குறைகள் பாதி தீர்ந்துவிடும். பொதுவெளியில் பொதுமக்கள் கஷ்டப்படும்போது உதவுங்கள்.

பொதுமக்களும் காவல்துறையினரும் நெருக்கமாக இருந்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அரசு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை செய்யுங்கள்.

இனிமேல் ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், இல்லீகல் பிசினஸ், மணல், கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற வியாபாரிகளிடம் தொடர்பு வைத்திருந்தாலோ, மாமூல் வாங்கினாலோ தகவல் தெரிந்தால் மன்னிப்பே கிடையாது உடனே டிஸ்மிஸ் தான்.

டிஎஸ்பிக்கள் அன்றாடம் மாலை மற்றும் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் போங்கள். நீங்கள் போனால் தான் உங்கள் சப்டிவிஷனில் உள்ள எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள் ஏரியாவை சுற்றி ரவுண்ட்ஸ் வருவார்கள், ஏரியாவில் போலீஸ் நடமாட்டம் இருந்தாலே குற்றங்கள் குறைந்து விடும்.

இனி கள்ளச்சாராயத்தால் மரணம் ஏற்படக்கூடாது. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நெஞ்சை நிமிர்த்தி வேலை செய்யுங்கள்” என பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

விழுப்புரம் சரகத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரிவ்யூ மீட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னானூர் அகழாய்வில் கற்கால கருவி: ஸ்டாலின் பெருமிதம்!

ரஃபேல் வாட்ச்: அண்ணாமலைக்கு கொடுத்ததே செந்தில் பாலாஜி தான்… கொளுத்திப்போட்ட கல்யாணராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel