ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் மோசடிகள் அதிகரித்துவருவதால், கவனமுடன் செயல்பட வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மோசடிகளும் வளர்ந்து வருகின்றன.
வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் கார்டின் 12 இலக்க எண்ணை பெற்று பண மோசடி செய்தது தொடங்கி ஆன்லைன் விற்பனை செயலி மூலம் கார், பைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி ஏமாற்றுவது, ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடுவது, ஆன்லைனில் பகுதி நேர வேலை என்று கூறி மோசடியில் சிக்க வைப்பது என பல வகைகளில் தற்போது பணமோசடிகள் நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்தி பலர் பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர். அதிலும், ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகம்.
முதலில் டேட்டிங் ஆப்பில் தொடங்கும் பேச்சு நாளுக்கு நாள் வளர்ந்து அடுத்ததடுத்த கட்டங்களை நோக்கி செல்கிறது.
உரையாடல்களின்போது ஒருவரின் புகைப்படங்களை பெற்று அதை ஏஐ-யை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி, அதைக்காட்டி பணம் பறிந்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த வாரம் சென்னை வடபழனியை சேர்ந்த சவுண்ட் இன்ஜினியரிங் வேலை செய்யும் இளைஞரிடம் 8 பேர் கொண்ட கும்பல் ரூ.27 ஆயிரம் வரை பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதரன் ஆன்லைன் டேட்டிங் ஆப் மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
‘சே ஹாய்’ என்ற பெயரில் ஆன்லைன் டேட்டிங் ஆப் செயலியில், 24 வயதான தாமோதரன், அகிலா என்ற பெண்ணுடன் பேசி வந்துள்ளார்.
அப்படி பேசிக்கொண்டிருந்தபோது, அந்த பெண், தாமோதரனுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்ப ரூ.500 வரை கேட்டுள்ளார். திடீரென அகிலா அவரது வீடியோ மற்றும் புகைப்படங்களை தாமோதரனுக்கு அனுப்பாமல், தாமோதரன் அவரை தொந்தரவு செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துவிடுவேன் கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்த தாமோதரன் “சே ஹாய்” என்ற செயலியில் இருந்து வெளியேறியுள்ளார். மறுநாள், தாமோதரனின் கைப்பேசிக்கு சைபர் கிரைம் அதிகாரிகள் என்று கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர் அகிலா தற்கொலை செய்துகொண்டதாகவும், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டாம் என்றால் ரூ.70 ஆயிரம் அனுப்புமாறும் கூறியுள்ளார். தாமோதரன் முதலில் ரூ.13 ஆயிரத்தை அழைப்பு வந்த எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.
பிறகுதான், தாம் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த தாமோதரன் இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சைபர் கிரைம் அதிகாரி சுகுமார் தலைமையிலான குழு, கடந்த சில மாதங்களில் மட்டும் இதேபோன்று 4 பேரை மோசடி கும்பல் ஏமாற்றியது கண்டுபிடித்தது.
இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறை தரப்பில், “சென்னையில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. முதலில் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
ஆன்லைனில் மட்டுமே தெரிந்த ஒருவருக்கு பணம் அனுப்புவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஒருவர் உங்களிடம் ஒரு சமூகவலைதளத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றொரு தளத்திற்கு மாறுவது குறித்து உங்களிடம் பேசினால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நேரில் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் உதவியாக பணம் கேட்டாலோ அல்லது ஒரு எண்ணில் இருந்து ஆன்லைன் மூலம் உங்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டு தவறுதலாக அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திருப்பி அனுப்பும்படி கேட்டாலோ, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதன்மூலம், பணமோசடிகள் ஈடுபட அதிகவாய்ப்பு உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் பலர் இங்கு மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். ஆன்லைன் மூலம் பணம் இழந்தவர்கள் உடனடியாக சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகாரளிப்பதன் மூலம், விரைவில் தங்களது பணத்தை திரும்பப்பெறும் வாய்ப்புள்ளது.
ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் பாதிக்கப்பட்டதாக இதுவரை பலர் புகார் அளித்துள்ளனர். அதில் சிலரது பணம் மட்டுமே தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைனில் பணம் அனுப்பும்போது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என சைபர் கிரைம் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை : போலீசாருக்கு முதல்வர் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை… சென்னை வரும் மாயாவதி