சல்லாப டாக்டர் சதீஷ்குமாரின் ஆபாச வீடியோ: கதறும் பெண்!

தமிழகம்

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியர் டாக்டர் சதீஷ்குமார், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்த புகார் மின்னம்பலத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதி இரவு வெளியானது.

மருத்துவ மாணவிகள் பகீர் புகார்: பாலியல் டாக்டரை காப்பாற்றும் பாலிடிக்ஸ் டாக்டர்கள்? என்ற தலைப்பிலான அந்த செய்தி வெளியான அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 13 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்துக்கு மருத்துவமனை ஆய்வுகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றார். அவரது வருகையின்போது இந்த விவகாரத்தை நேரடியாகவே அவரிடம் குமுறினார்கள் மருத்துவ மாணவர்கள்.

அதிர்ச்சி அடைந்த  அமைச்சர் மா.சுப்பிரணியன் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அமுதவல்லியிடம் பேசி, விசாரணைக் குழுவினரின் அறிக்கை பற்றி விசாரித்தார்.

முதல் நாள் இரவு மின்னம்பலம்  செய்தி விரிவாக வெளியானதை ஒட்டி  அமைச்சருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் அறிவுறுத்தல்கள் பறந்திருந்தன. இதையெல்லாம் சேர்த்து 13  ஆம் தேதி, தான் தர்மபுரியில் இருக்கும்போதே அந்த பாலியல் அத்துமீறல் டாக்டர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்  அமைச்சர். இதை பத்திரிகையாளர் சந்திப்பிலும் அறிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு ஆறுதல் தருவதாகச் சொல்லும் மருத்துவ மாணவர்கள், ‘இந்த டாக்டர் சதீஷ்குமார் மீது ஏற்கனவே பல புகார்கள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒழுங்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று தன் மாணவிகள் மீதே கை வைக்கும் அளவுக்கு அவருக்கு தைரியம் வந்திருக்காது.

சட்டத்தை தன் செல்வாக்கால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார் சதீஷ்குமார். ஏற்கனவே தப்பித்தது போல் இதிலும் எளிதாக தப்பிக்கலாம் என நினைத்தார்.

ஆனால் மாணவர்களின்  உறுதி, விடாப்பிடியான முயற்சி ஆகியவற்றால் இப்போது முதல் கட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு டாக்டர் தொழிலையே தடை செய்ய வேண்டிய அளவுக்கு மோசமான குற்றப் பின்னணி கொண்டவர் இந்த டாக்டர்” என்கிறார்கள் தர்மபுரி மருத்துவ மாணவர்கள்.

நாம் அதிர்ந்துபோய் டாக்டர் சதீஷ்குமாரின் பின்னணி பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் அணி வகுத்தன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் உள்ள பாப்பாரப்பட்டி பேரூராட்சி, அப்பாத்துரை நகர், போலீஸ் காலனியில் வசித்து வருபவர் டாக்டர் சதீஷ்குமார். ஏரியாவில் பிரபல டாக்டர் என்பதாலும் தன் கூடப் படித்த மாணவர் இன்று எம்பியாக இருக்கும் அரசியல் தைரியத்தாலும் இந்த சதீஷ்குமார் ஆடிய ஆட்டமும் செய்த அக்கிரமும் கொஞ்ச நஞ்சமல்ல.

இதற்கு கண்ணீர் சாட்சியாக இருக்கிறார்  பாப்பாரப்பட்டியில் பிறந்து தற்போது மைசூரில் வசிக்கும் தவட்டம்மா ( பாதுகாப்பு கருதி பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)  

தவட்டம்மா இப்போது திருமணமாகி மைசூரில் வாழ்ந்து வருகிறார்.  என்னதான் திருமணமாகி அரண்மனைக்கே சென்றாலும் அவ்வப்போது தாய் வீட்டுக்கு வந்து செல்வதுதான் திருமணமான பெண்களுக்கு சொர்க்கத்துக்கு போய் வருவது போன்ற உணர்வு.

அந்த வகையில் அவ்வப்போது தன் சொந்த ஊரான பாப்பாரப்பட்டிக்கு  வந்து செல்வார் தவட்டம்மா. அப்படி ஊருக்கு வரும்போது தன் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது டாக்டர் சதீஷ்குமாரின்  மருத்துவமனைக்குதான் அம்மாவை கூட்டிச் செல்வார்.

தன் அம்மாவின் உடல் நிலையை காண்பிக்க அழைத்து வந்த தவட்டம்மாவின் உடலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார் ‘சகலகலா சல்லாப டாக்டர்’ சதீஷ்குமார்.  அந்த அம்மாவுக்கு உடல் நிலை சரியாகிவிட்டாலும் கூட, ‘அடுத்த வாரம் கூட்டிட்டு வா அம்மாவை செக் பண்ணனும்’ என்பார்.

தவட்டம்மாவும் தன் அம்மாவின் ஆரோக்கியத்துக்காக  அந்த ஊரிலேயே தங்கி அம்மாவை மீண்டும் டாக்டரிடம் அழைத்துச் செல்வார். பாவம் அப்போது தவட்டம்மாவுக்குத் தெரியவில்லை, இந்த சல்லாப டாக்டர் தன் அம்மாவின் உடல் நலனுக்காக வரச் சொல்லவில்லை, தன் உடல் வளத்தை வேட்டையாடும் எண்ணத்தோடுதான் வரச் சொல்கிறார் என்று.

அம்மாவுக்காக அடிக்கடி மருத்துவமனை சென்று டாக்டர் சதீஷ்குமாரை பார்க்க வேண்டியிருந்ததால் அவர் தனது செல்போன் நம்பரை கேட்டபோது உடனடியாகக் கொடுத்தும் விட்டார் தவட்டம்மா. குட் மார்னிங் மெசேஜ், அம்மாவுக்கு டேப்லெட் கொடுத்தியா  போன்ற மெசேஜ்களால் டாக்டரின் அக்கறையை நினைத்து நெகிழ்ந்து போனார் தவட்டம்மா.

காலப்போக்கில் நெருக்கமான பழக்கங்களால் குட் மார்னிங் குட்நைட் எனத் தொடங்கி அந்தரங்கங்கள் பேசும் அளவுக்கு வார்த்தையால் தவட்டம்மாவை வசப்படுத்திவிட்டார் டாக்டர்.

அடிக்கடி டாக்டர் சதீஷ்குமாரின் க்ளினிக் சென்று வந்த அந்த பெண் தவட்டம்மா அண்மையில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கே சென்றுவிட்டார்.  டிஜிபி அலுவலகம் வரை சென்றது ஏன்? தவட்டம்மாவே விளக்குகிறார்.

“போன வருஷம் 2021 ல  ஆட்சி மாறியது.  இப்பவாவது நமக்கு நியாயம் கிடைக்குங்குற எதிர்பார்ப்போட டிஜிபி சைலேந்திரபாபு ஆபீசுக்கு போய் அந்த டாக்டர் மேல புகார் கொடுத்தேன். இந்தப் புகாருக்கு பின்னாடி  என்னோட கண்ணீர் கதை நெறைய இருக்கு.

எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு நான் அந்த டாக்டர் சதீஷ்குமார்கிட்ட அழைச்சிட்டுப் போனேன்.  அங்க பாத்து பழகினாரு. அப்புறம் ஒரு நாள் என்னை மட்டும் தர்மபுரி அரசு  மெடிக்கல் காலேஜ்  மருத்துவமனைக்கு வர சொன்னாரு. அங்க என்னை பேசிப் பேசியே நம்ப வைச்சு என்னை முழுசா எடுத்துக்கிட்டாரு.

நான் வேணாம் வேணாம்னு சொல்லியும் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை,  நாம சாப்பிடுறது மாதிரி, டெய்லி பாத்ரூம் போற மாதிரி இதுவும் ஒரு இயல்பான நிகழ்வுதான். இதை நம்ம சொசைட்டிதான் பெரிசுபடுத்தி புனிதம் கினிதம்னு பார்க்குதுனு  என்னை நம்ப வச்சிட்டாரு. தொடர்ந்து என்கிட்ட போன்ல பேசுவாரு.

ஒரு நாள் இன்னொரு  புது நம்பர்லேந்து போன் வந்துச்சு. யார் பேசறீங்கனு கேட்டதுக்கு, ‘நான் தான் டாக்டரோட ஃப்ரண்டுனு சொன்னாரு. என்ன வேணும்னு கேட்டேன். அந்த ஆளும் டாக்டர் மாதிரியே ஏதேதோ என்கிட்ட பேசினாரு. எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்புறம்தான் தெரிஞ்சது,. டாக்டர் சதீஷ்தான் என் நம்பரை அவரோட ஃப்ரண்டுகளுக்கும் கொடுத்து என்கிட்ட பேச சொல்லியிருக்காருனு.

அவங்களும் என்கிட்ட ஒரு மாதிரியா பேச ஆரம்பிச்சாங்க. நான் உடனே டாக்டர்கிட்ட போன் பண்ணி கேட்டேன். ‘என்னடி… என் கூட இருந்தீல்ல… என் ஃப்ரண்ட்ஸ் கூடயும் இருந்தா என்ன குறைஞ்சா போயிடுவே?’னு அசிங்கமா கேட்டாரு. நான்  அதிர்ச்சி ஆயிட்டேன். இனிமே என் கூட பேசாதீங்கனு சொல்லிட்டேன்.  

அப்பதான் அந்த குண்டைத் தூக்கிப்  போட்டாரு டாக்டர். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்ததை ரகசியமா வீடியோ  எடுத்து வச்சி அதை என்கிட்டயே ப்ளே பண்ணி காட்டினாரு. எனக்கு உசிரே போயிடுச்சு.  ’நீ எப்போதும் போல என்கூடவும் இருக்கணும். என் ஃபிரண்ட்ஸ் கூடவும் இருக்கணும்.

இதுக்கு ஒத்துக்கலேன்னா இந்த வீடியோவை வெளிய  விட்டுருவேன். சோசியல் மீடியா ஃபுல்லா பரவிடும். என் மூஞ்சை நான் மறைச்சிடுவேன். உனக்குதான் அசிங்கம்’னு  மிரட்டினார்” என்று பொலபொலவென கண்ணீர் விட்ட அந்த பெண் தொடர்ந்தார்.

“இதுக்கு மேலையும் என்னால தாங்கமுடியலை. கணவர்கிட்ட உண்மைய சொல்லிட்டு தற்கொலை செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணேன்.  ’என்னை மன்னிச்சிடுங்க.  உங்களுக்கு மனைவியா இருக்குற தகுதி எனக்கு இல்ல. என்ன இந்த டாக்டர் இப்படி சீரழிச்சுட்டான். நான் தற்கொலை பண்ணிக்கிறேன்.

ஆனா அவனை நீங்க ஏதாவது பண்ணனும்’னு   சொல்லிட்டு சூசைட் பண்ணிக்க ட்ரை பண்ணினேன். அப்பதான் என் கணவர், எனக்கு தைரியம் சொன்னாரு. கதறியழுத என்னை தேத்தினாரு. கடவுளா இருந்து என்னை தற்கொலையில இருந்து என்னைக் காப்பாத்தினாரு. நான் அவருக்கு துரோகம் பண்ணியிருந்தாலும் அதை  நானே அவர்கிட்ட சொல்லியும் அவர் எனக்காக நின்னாரு.

‘உன்னை அந்த டாக்டரு நம்ப வைச்சு ஏமாத்தியிருக்கான்மா. நம்பி வந்தவங்களை ஒரு டாக்டரே இப்படி செஞ்சதை நாம சும்மா விடக் கூடாதுனு எனக்கு தைரியம் சொன்னாரு. அதுமட்டுமில்ல… என் எதிர்லயே அந்த டாக்டருக்கு போன் போட்டு இங்கிலீஷ்ல கன்னா பின்னானு திட்டினாரு.  

அதுவரை என் மேல மட்டுமே கோபப்பட்ட அந்த டாக்டர் சதீஷ்குமார் என் கணவருக்கு இந்த பிரச்சினை தெரிஞ்சு அவர் என் கூட நிக்கிறார்னு புரிஞ்சதும் என் குடும்பத்து மேலயே கோபப்பட ஆரம்பிச்சாரு. அதுக்கப்புறம்தான் அந்த டாக்டரோட செல்வாக்கு என்னனு தெரிய ஆரம்பிச்சது” என்று  கண்ணீரைத் துடைத்துக்  கொண்டே தொடர்ந்தார் தவட்டம்மா.

“என் கணவர் போன்  போட்டு டாக்டரை கடுமையா திட்டினத வச்சி… ‘அடையாளம் தெரியாத யாரோ ஒருத்தர் என்னை போன்ல தொடர்பு  கொண்டு கொலை மிரட்டல் விடுறாரு’னு என் கணவர் செல் நம்பரை குறிப்பிட்டு தர்மபுரி பி1 போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாரு டாக்டர்.

இது நடந்தது 2021 மார்ச் மாசம். அந்த டாக்டருக்கு அரசியல்வாதிங்க தொடர்புனு ஏகப்பட்ட செல்வாக்கு இருக்கு. அவங்களுக்கும் போன் போட்டு இந்த விசயத்தை சொல்லியிருக்காரு. அவங்க போலீசுக்கு ப்ரஷர் கொடுத்திருக்காங்க.

அதனால தர்மபுரி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் என் கணவருக்கு போன் பண்ணினாரு. ‘நீங்க கவர்ன்மென்ட் டாக்டருக்கு போன் போட்டு  மிரட்டிருக்கீங்க. என்ன தைரியம் இருக்கும்? உடனே விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க’னு கூப்பிட்டாரு.

அப்போ இன்ஸ்பெக்டர்கிட்ட பேசின என் கணவர், ‘சதீஷ்குமார் பண்ண அக்கிரமங்களை எல்லாம் சொல்லி, இதைப் பத்தி நான் டிஜிபிகிட்ட புகார் கொடுக்கப் போறேன்’னு சொன்னாரு. என்ன நினைச்சாரோ அந்த இன்ஸ்பெக்டர், ‘இவ்வளவு நடந்திருக்கா?  நீங்க டிஜிபி ஆபீஸ் போங்க. அதன் பிறகு இந்த புகாரை பாத்துக்கலாம்’னு ஆறப் போட்டாரு.

தப்பு செஞ்ச அந்த அயோக்கிய டாக்டரே நம்ம மேல போலீஸ்ல புகார் கொடுக்குறானேனு எனக்கு கோபம் அதிகமாச்சு. உடனே 2021 மார்ச் மாதம் 13 ஆம் தேதி நானும் என் கணவரும் அப்ப இருந்த டிஜிபி திரிபாதிகிட்ட இந்த டாக்டரை பத்தி புகார் கொடுத்தோம்.

எங்க அம்மாவை நான் சிகிச்சைக்கு  கூட்டிட்டு போனதுலேர்ந்து அந்த டாக்டர் என்கிட்ட பேசி என்னை ஏமாத்தி ஆபாச படம் எடுத்தது வரை அந்த புகார்ல சொல்லியிருந்தேன். என்னோட புகாரை அப்பவே தர்மபுரி எஸ்பிக்கு  பாஸ் பண்ணிட்டாங்க. அதுக்குள்ள தேர்தலும் வந்துட்டதால அந்த புகார் அப்படியே இருந்துச்சு.

ரெண்டு மாசத்துல ஆட்சி மாறிடுச்சு. நாங்க புது டிஜிபி சைலேந்திரபாபு கவனத்துக்கும் இதை கொண்டு போனோம். ஏற்கனவே கொடுத்த புகார் கெடப்புலயே இருக்குனு அவர்கிட்ட முறையிட்டோம்.

இதனால, என்னோட புகாரை தூசு தட்டிய தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன், டிஎஸ்பி ரவிக்குமார்கிட்ட விசாரிக்கச் சொன்னாரு. ஆனா போலீஸ் என்ன செஞ்சது தெரியுமா?” என்று கதறினார் அந்த பெண் தவட்டம்மா.

தொடரும்

15 வயது சிறுமி பாலியல் வழக்கு: 21 பேர் குற்றவாளிகள்-தண்டனை என்ன?

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
2
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *