மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ஆபத்து ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
” மின்சார சட்ட திருத்த மசோதா – 2022 நிறைவேற்றப்பட்டு தனியாரிடம் சென்றால், தமிழக மக்களின் உரிமை பறிக்கப்படும். மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைத்து, விருப்பப்படி கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ஆபத்து ஏற்படும்.
இலவச மின்சாரம் ரத்து செய்வதற்கான பணியைத் தொடங்குவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்துகின்றனர்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும். தமிழக அரசு செய்து வரும் நல்ல செயல்கள் மறைந்து மின்சாரக் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு என்பது மக்களிடம் முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக முதல்வரை சந்தித்து, மக்கள் மீது சுமையை ஏற்றுவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செம்பு உற்பத்தியை தொடங்காமல் மின்சாரம் உற்பத்தியைத் தொடங்கட்டும்.
உயர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீட்டால், தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தமிழக அரசு ஆணையம் அமைத்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை கண்டறிந்து அமல்படுத்த வேண்டும்” என்றார்.
-ராஜ்
வீராங்கனை மரணம்: விசாரணை அறிக்கையில் வெளியான உறுதி தகவல்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!