ஸ்ரீரங்கம் கோயிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக டிப்பர் லாரி செல்ல முயன்றதால், சுவர் சிற்பத்தில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. Damage to Srirangam Temple Wall Sculptures
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயில். விஷ்ணுவின் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் ஸ்ரீரங்கம் கோயில் போற்றப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு உலகில் உள்ள பாரம்பர்யச் சின்னங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோ விருது வழங்கியது. பழமையை மாற்றாமல் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டதால் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஏராளமான விழாக்கள் நடைபெறும். இதில் மிகவும் சிறப்பு பெற்றது வைகுண்ட ஏகாதசி.
இந்த ஆண்டு வரும் டிசம்பர் 12ஆம் தேதி ஜனவரி 2ஆம் தேதி வரை 21 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் 23ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு கோயிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல், பக்தர்களுக்கு குடிநீர் வசதி, தடையின்றி மின்சாரம், மருத்துவ உதவி வழங்க ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்னும் விழா தொடங்க இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கோயிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக டிப்பர் லாரி ஒன்று சென்றுள்ளது. இதில் லாரியின் அகலம் அதிகமாக இருந்ததால் அந்த வாசல் வழியாக உள்ளே செல்ல முடியவில்லை.
இதனால் பின்னோக்கி எடுத்தபோது, அந்த வாசல் பகுதியில் லாரி சிக்கிக்கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருந்த கல் சுவரில் செதுக்கப்பட்டிருந்த சிலைகள் சேதமடைந்திருக்கின்றன.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. தொடர்ந்து தற்போது டிப்பர் லாரி உரசி சுவர் சிலைகள் சேதமடைந்திருப்பதாக பரவிய தகவல் ஸ்ரீரங்கம் பகுதி மக்களிடையேயும், ரங்கநாதர் பக்தர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அந்த பகுதி மக்களிடம் பேசிய போது, “வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு உள் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பழக்கடைகள், பூக்கடைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த டிப்பர் லாரி சென்ற வழி என்பது மேல உத்தரவீதி, மேல சித்திர வீதிகளை இணைக்கும் மேற்கு கோபுர வாசல் வழியாகும். இந்த வழியில் சின்ன சின்ன வாகனங்கள் செல்லலாமே தவிர பெரிய வாகனங்கள் எல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. எப்படி இதுபோன்ற வாகனங்களை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நமது பண்பாடு, கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் ஸ்ரீரங்கம் கோயிலையும், அதன் கோபுரங்களையும் பாதுகாத்து கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும். இனி இதுபோன்ற கனரக வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது” என்று கூறினர்.
இதுகுறித்து நாம் ஸ்ரீரங்கம் கோயில் இணையதளத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, “வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக வேலைகள் நடந்து வருகின்றன. கோயில் பிராகாரத்தை சுற்றி நடைபெறும் பணிகளுக்காக தான் மாநகராட்சியின் டிப்பர் லாரி வந்தது. வழக்கமாக நன்கு பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் தான் வருவார்கள். இந்த முறை புது ஓட்டுநர் வந்திருக்கிறார். எனினும் லாரி மோதியதில் சிலைகள் எதுவும் சேதமடையவில்லை. அந்த பகுதிகளில் சிலைகள் எதுவும் இல்லை. கல்லிலே செதுக்கப்பட்டிருக்கும் புடைப்பு சிற்பங்கள் லேசாக சேதமடைந்தன” என்றனர்.
ஏற்கனவே கிழக்கு கோபுர பகுதியில் இடிந்து விழுந்து ஏற்பட்ட சேதம் கூட இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மழையில் பாதித்த சிறு, குறு தொழில்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
லிங்குசாமி இயக்கும் பையா 2: ஆனா ஹீரோ கார்த்தி இல்ல!
சின்னத்திரை நடிகையை கரம் பிடித்த ரெடின் கிங்ஸ்லி… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
Damage to Srirangam Temple Wall Sculptures