வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 19) தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் காமராஜ், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை ஓட்டேரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் கல்பனா, கார்த்தி, ஆனந்தன் ஆகியோரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணையானது திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று கைதான கல்பனா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி தீர்ப்பு அளிக்கக்கோரி காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கே.கே.ராமகிருஷ்ணன், விசாரணையை முடிக்க ஏன் காலதாமதம் என மதுரை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். நீதிபதி தரப்பில், வழக்கின் விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. நவம்பர் 19-ஆம் தேதி (இன்று) தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம், முதல் குற்றவாளியான கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தன், கார்த்திக்கை விடுதலை செய்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…