பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று (மார்ச் 17) தமிழகம் முழுவதும் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் பால் விலையை உயர்த்தி வழங்குமாறு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
தற்போது ஆவினுக்கு கொள்முதல் செய்யப்படும் பசும்பாலின் விலை லிட்டருக்கு 35 ரூபாயாக உள்ள நிலையில் அதிலிருந்து ஏழு ரூபாய் உயர்த்தி 42 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் எருமை பாலின் விலை தற்போது 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், ஏழு ரூபாய் உயர்த்தி 51 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.
ஆனால் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தாததால் பால் நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்களுடன் நேற்று (மார்ச் 16) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று (மார்ச் 17) ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்திவிட்டு அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27.5 லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. இந்த பால் மூலம் ஆவினில் விற்பனை செய்யப்படும் நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் செய்யப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பால் நிறுத்த போராட்டம் குறித்துப் பேசியிருந்த பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள், “இந்த போராட்டத்தால் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் பால் வழங்குவது குறைந்து கொண்டே வரும்.
தொடர்ந்து 5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைப்படும். தனியார் நிறுவனத்துக்கு கொடுப்போம் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பால் உபரி என்பது இல்லை. இதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் எங்கிருந்தும் பால் வாங்க முடியாது. ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு முழுமையாக காப்பாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் சங்க உறுப்பினர்கள் கூடுதல் விலை கொடுக்கும் தனியார் நிறுவனத்துக்குப் பாலை கொடுத்து விடுவோம். பால் விலை உயர்வுக்குத் தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்” என்று பேசியிருந்தனர்.
பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கைக்கு அரசு தீர்வு காணவில்லை என்றால் தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றனர். இதனால் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் பால் உற்பத்தியாளர்கள் ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பால் நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். லிட்டர் கணக்கிலான பாலை சாலையில் கொட்டி பால் கொள்முதல் உயர்த்தாததற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா