மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்ததற்கு மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியை சேர்ந்த பழனி குருநாதன் (55) மங்கைநல்லூரில் இரும்பு பட்டறை நடத்தி வந்தார். இந்த பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை செய்து வந்தார்.
நேற்று (ஜூன் 12) வழக்கம் போல் வேலை பார்த்து வந்த இருவரும் பட்டறையில் மயங்கிய நிலையில் இருந்ததை அருகில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். அவர்களுக்கு அருகில் இரண்டு மது பாட்டில்களும் இருந்துள்ளது. அதில் ஒரு மதுபாட்டில் திறக்கப்படாமலும் மற்றொரு பாட்டில் பாதி மதுவுடனும் இருந்துள்ளது.
உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு மயிலாடுதுறை பெரியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து, இருவரது மரணத்திற்கும் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி அருந்திய மது தான் காரணம் என்று குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் உடற்கூராய்விற்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பட்டறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் தஞ்சாவூர் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சோதனையில் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கிய மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து டாஸ்மாக் சரக்கில் சயனைடு எப்படிக் கலந்தது என்பது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மீண்டும் டாஸ்மாக் மதுவில் சயனைடு
கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருப்பது சோதனையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் மேலும் 2 பேர் சயனைடு கலந்த டாஸ்மாக் மதுவைக் குடித்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணத்தை சொல்லப் போகிறது அரசு
இதற்கு பாஜக மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?
பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள்.
உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுவில் சயனைடு கலந்தது எப்படி? ஒருவேளை அவர்களே கலந்ததாக வைத்துக் கொண்டால், சயனைடு அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்கிறதா? கொடிய நஞ்சான சயனைடு விரும்பியவர்கள், விரும்பிய நேரத்தில் கிடைப்பதை அரசு அனுமதிக்கிறதா?
டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுவிலேயே நஞ்சு கலந்திருந்ததா? என்ற ஐயம் எழுகிறது. அதைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
தமிழ்நாட்டில் மது அருந்தி மக்கள் உயிரிழப்பது தொடர்வதும், மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று கூறி விட்டு அரசு கடந்து செல்வதும் கவலை அளிக்கிறது. இது தொடர்பான மக்களின் ஐயங்களைப் போக்க உயர்நிலை விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா