சிலிண்டர் விலை: 500 ரூபாய் குறைத்த புதுச்சேரி முதல்வர்!

தமிழகம்

புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான விலை ஆயிரத்தை தாண்டியது.

இந்த விலை நிறுவனத்துக்கு நிறுவனம் ரூ.10 முதல் ரூ.20 வரை வித்தியாசம் இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.200ம், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400ம் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண சலுகை இன்றே உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளார். அதன்படி, சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் ரூ.200 மானிய குறைப்பும் சேர்த்து புதுச்சேரி அரசு கூடுதலாக ரூ. 300 மானியம் வழங்குகிறது.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சமையல் எரிவாயுவின் விலை ரூ.200 குறைக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ’பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்’ அதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 9.1 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழைப் பெண்களுக்கு கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மத்திய அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ. 200  மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இன்று ஆகஸ்ட் 30 முதல் மேலும் ரூ.200 மானியம் வழங்கப்படும்.

புதுச்சேரி மாநிலத்தில் மாநில அரசின் சார்பில் ஏற்கெனவே சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 300-ம், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூபாய் 150-ம் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு ரூ.200 மானியம் அளித்திருப்பது, புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவாக உள்ளது. இதனால் சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டரின் விலை  ரூ.500 குறைக்கப்படுகிறது. அதைப்போல, மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசின் ரூ.200 மானியத்தை சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக ரூ.150 மானியம் வழங்குகிறது.

இதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.350 குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காவல்நிலையத்தில் காணாமல் போன செல்போன்கள்: திருடர்கள் கைவரிசை?

’ஜவான்’ முன் வெளியீட்டு விழா: சென்னை வந்தார் ஷாருக்கான்

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *