நாகர்கோவிலில் டீக்கடை ஒன்றில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்தவர் ஷபிக். இவர் கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீ கடை 24 மணி நேரமும் செயல்படும் .இன்று( ஜூலை 17 )அதிகாலையில் டீ கடையில் பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த மூஸா (48) வடை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டர் காலியானது தெரியவந்தது.
புதிய சிலிண்டரை மாற்றும் பொழுது எதிர்பாராத விதமாக சிலிண்டர் தீ பற்றி எரிந்தது. சற்று நேரத்தில் கடை முழுவதும் தீ பரவியது. உடனே அருகிலிருந்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பெரும் சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.
இதில்,கடை ஊழியர்கள் இரண்டு பேர் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். இவர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த மூஸா (48), பள்ளி விளையைச் சேர்ந்த பிரவீன் (25, காட்டு புதூரைச் சேர்ந்த சுசீலா (50), திங்கள் நகரைச் சேர்ந்த பக்ரூதீன் (35), சுப்பையா (66), சுதா (43), சசிதரன் (62), சேகர் (52) ஆகியோர் ஆவர். 8 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்தால் கடையிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இவ்விபத்து தொடர்பாக வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
டீக்கடை விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின், தீக்காயம் அடைந்தவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சர் நிதியிலிருந்து நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்