CycloneMichaung புயல் எங்கே உள்ளது? எப்படி நகர்கிறது? சென்னை எப்போது தப்பிக்கும்?

தமிழகம்

சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் CycloneMichaung புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கன மழை பெய்துகொண்டிருக்கிறது.

இப்போது வரை தொடரும் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

காற்றும் வலிமையாக வீசுவதால் நேற்று இரவே பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதால் செல்போன் சார்ஜ் கூட போட முடியாத நிலை நிலவுகிறது.

புயல் இப்போது எங்கே இருக்கிறது? அதன் பயணத் திசை என்ன என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் தெளிவான படங்களோடு அப்டேட் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.

Image

இந்திய வானிலை மையம் இன்று (டிசம்பர் 3) பகல்  1.15 மணிக்கு வெளியிட்ட அப்ட்டேட்டில் முக்கியமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

அதாவது சென்னைக்கு கிழக்கு வட கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடலில் CycloneMichaung காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகி பின்னர் புயலாக மாறியது.

இன்று காலை 8. 30 மணி வாக்கில் அது சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது கரையை நோக்கி நகரும் வேகம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதன் தீவிரத் தன்மையில் மாற்றம் இல்லை. எனவே இன்று காலை முதல் அது 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக கருதலாம்.

அது மெல்ல மெல்ல தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து அதாவது சென்னையை நெருங்கி பின் வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை முற்பகல் தான் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,


சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே நெடுஞ்சாலை வழியாக கடப்பதற்கு மூன்றரை மணி நேரம் தான் ஆகிறது. ஆனால் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டரில் தற்போது நிலை கொண்டிருக்கும் புயல், தற்போது சென்னையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. அது நெல்லூர் கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு நாளை முற்பகல் ஆகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. அந்த அளவுக்கு புயலின் வேகம் நிதானமாக இருக்கிறது.

சென்னைக்கு அருகிலேயே புயல் தற்போது வலுவாக நிலை கொண்டிருப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு வரை மிக கன மழை பெய்யும். மெல்ல மெல்ல சென்னையைத் தொட்டு பிறகு அது வடக்கு திசையில் நகர்ந்து அதாவது தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து தீவிர புயலாக கடக்க கூடும் என்பதே தற்போது வானிலை மையத்தின் அப்டேட்.

அதனால் இன்று முழு இரவும் சென்னைக்கு மிக கன மழைக்கான வாய்ப்புகள் அதிகம். கன மழை மட்டுமல்ல… சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

புயலின் நகர்வின் போது ஏற்படும் தாக்கத்தால் அருகே உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இன்று இரவுக்குப் பின் அதாவது நாளை காலையில் இருந்து கன மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம்.

அதனால் இன்று இரவைக் கடக்கும் வரையில்… சென்னை சுற்றுப் புற மக்களே ஜாக்கிரதை!

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தயாரிப்பு நிறுவனம் துவங்க காரணம் இதுதான்: லோகேஷ் கனகராஜ்

மிசோரத்தில் எதிரொலித்த மணிப்பூர்: தோல்வியை தழுவிய துணை முதல்வர்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *