வெள்ளத்தால் உங்கள் கார் சேதமா? மாருதி, மஹேந்திரா, ஆடி கார் நிறுவனங்களின் அறிவிப்பு!

தமிழகம்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் உள்ள  தங்களது வாடிக்கையாளர்களுக்கு உதவிட மாருதி, மஹேந்திரா, ஆடி உள்ளிட்ட கார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

மிக்ஜாம் புயல் தமிழகம்-ஆந்திரா இடையில் தான் கரையை கடந்தது. இதனால் இந்த இரு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தின் சென்னை கடந்த சில நாட்களாக மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.

வரலாறு காணாத வெள்ளத்தால் ஒருபுறம் மக்கள் பாதிக்கப்பட, மறுபுறம் ஆசை ஆசையாக அவர்கள் வாங்கிய கார்களும் வெள்ளத்தில் மிதந்தும், மூழ்கியும் பரிதாபமாக காட்சி அளிக்கின்றன.

குறிப்பாக கார் வைத்திருப்பவர்களுக்கு வெள்ளம் வடிந்தபின் அதை மீண்டும் எப்படி ஸ்டார்ட் செய்வது? செலவு எவ்வளவு ஆகும்? இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியுமா? போன்ற கவலைகள் அதிகம் இருக்கின்றன.

இந்த நிலையில் மாருதி சுஸுகி, மஹேந்திரா & மஹேந்திரா மற்றும் ஆடி உள்ளிட்ட கார் நிறுவனங்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு உதவிகள் வழங்கிட முன்வந்துள்ளன.

இதுகுறித்து மாருதி நிறுவனம் நேற்று (டிசம்பர் 5 )வெளியிட்டுள்ள அறிக்கையில், ” புயலுக்கு முன்பே காரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த முன்னெச்சரிக்கை எஸ்.எம்.எஸ்-களை 7 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தற்போது அந்தந்த பகுதிகளில் உள்ள மாருதி டீலர்களுடன் இணைந்து வொர்க் ஷாப்களிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். விரைவான உதவிகளுக்காக 46 இழுவை டிரக்குகளும், 34 சாலையோர உதவி வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன ,” என தெரிவித்துள்ளது.

இதேபோல மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் நேற்று (டிசம்பர் 5 ) வெளியிட்ட  அறிக்கையில், ” பாதிக்கப்பட்ட மஹேந்திரா வாகனங்களை அருகில் உள்ள வொர்க் ஷாப் வரை எடுத்து செல்ல இலவச சாலையோர உதவி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சேவை 50 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கிடைக்கும். சேதமடைந்த உங்களின் வாகனங்களை ஆய்வு செய்வதற்கும், செலவு எவ்வளவு ஆகும் என்பதை மதிப்பீடு செய்திடவும் மஹேந்திரா நிபுணர் குழு உங்களுக்கு உதவும். இதற்காக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

வாடிக்கையாளருக்கான செலவுகளை குறைக்கும் வகையில் சிறப்பு தள்ளுபடிகள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்பெறும் வகையில் இந்த சலுகை டிசம்பர் 31,2023 வரை கிடைக்கும்,” என தெரிவித்துள்ளது.

இதேபோல ஆடி கார் நிறுவனத்தின் இந்திய தலைவர் பல்பீர் சிங் தில்லான், ” சென்னை நகரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அங்குள்ள எங்களது வாடிக்கையாளர்களுக்கு உதவிட நாங்கள் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு உதவிட இலவச சாலையோர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்து இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

போலீஸ் பாதுகாப்புடன் ஆவின் பால் விற்பனை!

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஹரிஷ் கல்யாண் நிதியுதவி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *