ஃபெஞ்சல் புயல் நாளை (நவம்பர் 30) கரையை கடக்க உள்ள நிலையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக இன்று உருவானது. இதனையடுத்து சென்னை முதல் நாகப்பட்டிணம் வரை உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் – காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே. இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மத்திய அமைச்சரை சந்தித்த ராஜேந்திரன்… சில மணி நேரத்தில் ஒதுக்கப்பட்ட நிதி!
”மதுரை டங்ஸ்டன் திட்டம் வருவதற்கு காரணமே ஸ்டாலின் தான்” : எடப்பாடி குற்றச்சாட்டு!