ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாளை (நவம்பர் 29) அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் சென்னையிலிருந்து 250 கி.மீ தொலைவில் நகர்ந்து வருகிறது. மாமல்லபுரம் – காரைக்கால் இடையே நாளை (நவம்பர் 30) பிற்பகலில் கரையைக் கடக்க உள்ளது.
இதன்காரணமாக இன்று முதல் நாளை வரை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்; மேலும் சூறாவளி காற்றானது மணிக்கு 70-80 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்” என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், தருமபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதேவேளையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி செயல்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அடிக்கடி ரிப்பேர்… கடுப்பாகி கடை முன்பே எலக்ட்ரிக் பைக்கை கொளுத்திய இளைஞர்!
ஃபெஞ்சல் புயல் எதிரொலி : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!