ஃபெஞ்சல் புயலானது கடந்த நவம்பர் 30-ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. நேற்று (டிசம்பர் 1) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்த நிலையில், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் கனமழை கொட்டித்தீர்த்தது.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 2011-ம் ஆண்டு தானியங்கி மழைமானி நிறுவப்பட்டு, தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அங்கு இதுவரை பதிவான மழை அளவுகளில் அதிகபட்சமாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி 14 செமீ மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில், அங்கு தற்போது 51 செமீ மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீட்டர் அளவிற்கு எப்போதுமே மழை பெய்தது இல்லை. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஃபெஞ்சல் புயல் தந்தது.
விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்பு பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மயிலத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை நீர் வரத்து அதிகரித்ததால் ஏரி, குளங்கள் உடைந்தது.
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் (நவம்பர் 30) இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வரலாறு காணாத வகையில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மயிலம் தென் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, உபரி நீர் வெளியேற வழியின்றி மதகு அருகில் உள்ள கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

இந்த தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை, நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் சூழ்ந்தது. திடீரென ஏரி உடைந்து, வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், கிராம மக்கள் அலறி அடித்துக் கொண்டு மேடான பகுதிக்கு சென்றனர்.
புதுச்சேரி – திண்டிவனம் ரோட்டில் புதிதாக நான்கு வழி சாலைக்காக சாலை ஓரத்தில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இப்பணிகள் முடிவடையாததால், பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. கூட்டேரிப்பட்டு ரெட்டணை ரோட்டில் ஏரிப்பகுதியில் இருந்து மிக அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
மயிலம் அடுத்த காட்ராம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அதிகரித்து, ஏரி கரை உடைந்து வயல்வெளியில் நீர் புகுந்தது. நெடி, மோழியனூர் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு, வயல்வெளியில் புகுந்தது.
இதேபோல், மயிலம் அடுத்த வீடூர் அணை, ஆத்திக்குப்பம், அங்கணிக்குப்பம் கணபதிபட்டு, வீடூர் பாதிராப்புலியூர், ஆலப்பாக்கம், கொரலூர் கள்ளக்கொளத்தூர், அவ்வையார்குப்பம், ரெட்டணை, தீவனுார் ஆகிய ஊர்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
வீடுர் அணை நிரம்பியது
வீடூர் அணை பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அதன் கொள்ளளவான
32 அடியில் 30.5 அடி நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வரத் தொடங்கியது.
இதையடுத்து அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புறக் கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நேற்று இரவு (டிசம்பர் 1) அபாய சங்கு ஒலியை எழுப்பினர்.
இன்று (டிசம்பர் 2) அதிகாலையில் அணையில் 9 கதவுகளையும் திறந்து, 36,203 கன அடி உபரி நீரை அணையிலிருந்து வெளியே திறந்து விட்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறியது.

வீடூர் அணையின் நீர் வரத்துகளை நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா ஆய்வு செய்தார். உதவிச் செயற்பொறியாளர் ரமேஷ், உதவிப் பொறியாளர் பாபு ஆகியோர் அணை நீர்வரத்து குறித்து தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டிவனம், மயிலம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திண்டிவனம் நகரத்தில் கிடங்கல் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…