சென்னை விமான நிலையத்தில் இருந்து பண்டிகை கால இனிப்பு வகைகளை கொண்டு செல்ல சுங்கத்துறை தடை விதித்துள்ளது.
பண்டிகை காலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது இனிப்பு வகைகள் தான். மேலும் பண்டிகை காலங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பு வகைகளை கொடுத்து வாழ்த்து கூறி அன்பை பரிமாறி கொள்வதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் மக்கள் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பேருந்து, ரயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பண்டிகை கால இனிப்பு வகைகளைக் கொண்டு செல்ல சுங்கத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதுமட்டுமின்றி திருப்பதி லட்டு போன்ற கோவில் பிரசாதங்களுக்கு தடை விதித்துள்ளனர். இது சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் பாங்காங் செல்வதற்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 4 பேர் வந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த லக்கேஜில் ஸ்வீட் பாக்ஸ்கள் இருந்துள்ளன. அதனை கண்ட சுங்கத்துறையினர் ஸ்வீட் பாக்ஸ்களை எடுத்து செல்லக் கூடாது என தடை விதித்துள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து பாங்காங் செல்லவிருந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு மும்பையில் இருந்து அதே ஸ்வீட் பாக்ஸ்களுடன் பாங்காங் சென்றுள்ளனர்.
அவர்கள் மீண்டும் சென்னை திரும்பிய போது “ஸ்வீட் பாக்ஸ் எடுத்து செல்ல தடை என்று நீங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் மும்பையில் எப்படி அனுமதித்தார்கள். இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தானே?” என்று சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
ஸ்வீட் பாக்ஸ்கள் மட்டுமின்றி இலங்கைக்கு செல்லும் பயணிகள் லுங்கி, காட்டன் புடவைகள், நைட்டி, வேஷ்டிகள் எடுத்து செல்லவும் தடை விதித்துள்ளனர். இதனால் பயணிகள் திருச்சி, பெங்களூருவில் இருந்து இலங்கை செல்கின்றனர். மேலும் திருச்சி, பெங்களூரு விமான நிலையங்களில் இதனை அனுமதிக்கின்றார்கள் என்று சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளை பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “நாங்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிடம் பேச மாட்டோம். சுங்க சட்ட விதிகளின்படி செயல்படுகிறோம். விதிமுறைகளுக்கு மாறாக செயல்படவில்லை. ஆனால் மற்ற விமான நிலையங்களில் எவ்வாறு அனுமதிக்கின்றார்கள் என்பது எங்களுக்கு தெரியாது” என்று தெரிவித்தனர்.
ஆனால் சுங்கத்துறையினரின் இந்த நடவடிக்கைகள் சரியானது அல்ல என்று முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். இது குறித்து, “இனிப்புகளை கொண்டு செல்வதற்கு சுங்க சட்ட விதிகளில் எந்த தடையும் இல்லை. குறிப்பாக ஆன்மீக ரீதியான திருப்பதி லட்டு, பண்டிகை கால இனிப்புகள் கொண்டு செல்வதை தடுப்பது சரியான செயல் அல்ல.
விமான நிலையத்திற்கு மிரட்டல்கள் போன்ற அவசர காலங்களில் மட்டும் அல்வா, ஊறுகாய், ஜாம் போன்ற திரவப் பொருட்களை எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்படும். அதையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தான் கண்காணிப்பார்களே தவிர சுங்கத்துறையினர் அல்ல.
இவ்வாறு அளவுக்கு அதிகமாக கெடுபிடி செய்வதால் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் எண்ணிக்கை குறையும். இதனால் போதிய பயணிகள் இல்லை என்று விமான நிறுவனங்கள், விமானங்களை ரத்து செய்யும் நிலை ஏற்படும். இந்த பிரச்சனைக்கு மத்திய நிதி அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ODI World Cup 2023: பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல இன்னும் வாய்ப்பு உள்ளதா?
மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் பலி!