மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு(CUET) விண்ணப்பிப்பதில், கொரோனா ஊரடங்கில் 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதி நீக்கம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.
அதன்படி, CUET- 2023 தேர்வுக்கு பிப் 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நுழைவுத்தேர்வு மே 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, பொதுத்தேர்வு எழுத இயலாத 10ம் வகுப்பு மாணவர்களுக்காக,
அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், மாணவர்களுக்கு அப்போது மதிப்பெண் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் க்யூட் தேர்வு எழுதுவதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் உள்ளீடு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன் ஜே.இ.இ (JEE ) தேர்வு எழுதுவதிலும், இதே போல ஒரு பிரச்சனை எழுந்தபோது, தமிழக அரசு தேசிய தேர்வு முகமை அமைப்பிற்கு கடிதம் எழுதி தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்வதிலிருந்து விலக்கு பெற்று சிறப்பு அனுமதியை பெற்றுத்தந்தது.
அதேபோல் க்யூட் தேர்வுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் உள்ளீடு செய்வதிலிருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் க்யூட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் இருந்து 10ம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதி நீக்கம் செய்யப்படுவதாக மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
கலை.ரா
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் திடீர் கள ஆய்வு!
ஆளுநர் நியமனம்: கட்சி பொறுப்பை ராஜினாமா செய்த சி.பி. ராதாகிருஷ்ணன்